குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் – சவால்களும் & தீர்வுகளும்

தமிழ்ப்பள்ளி ஆர்வலர், பொறியியலாளர் சுப்ரமணியன் இராகவன் – முன்னுரை 

மலேசிய நாட்டில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1816-இல் பினாங்கு மாநிலத்தில் பினாங்கு ஃபிரி பள்ளியில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டாலும் 1850 முதல் தமிழ்ப்பள்ளிகள் மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோட்டத் துறை வளர்ச்சியின் போது பல தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. 1957இல் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

பல்வேறு காலக்கட்டங்களில் பல சட்ட சாசனங்கள், கல்வி அறிக்கைகளின் மூலம் ஆரம்ப பள்ளிகளில் தாய் மொழிக்கல்வி  குறிப்பாக தமிழ் பள்ளிகளின் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1912, 1923, 1932 ஆண்டுகளில் தொழிலாளர் சட்டங்கள்,  1946-இல் மலாயன் யூனியன் கழக அறிக்கை, 1956-இல் ரசாக் கல்வி அறிக்கை பிறகு மிக முக்கியமாக 1961-இல் தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி/சீனப்பள்ளி அமைக்க வழிவகுத்த ராமான் தாலிப் கல்வி அறிக்கை. 1961-இல் தேசிய கல்விச் சட்டம் மற்றும் 1996 தேசிய கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பை உறுதி செய்து தாய் மொழி கல்வியின் எதிர்கால மேம்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகள் இந்திய சமுதாயம் சார்ந்த மிகப் பெரிய கல்வி அமைப்பாக விளங்கி வருகின்றது. 525 தமிழ்ப்பள்ளிகள், 80,000-க்கும் மேலான மாணவர்கள், 8,800 ஆசிரியர்கள், 525 தலைமையாசிரியர்கள், கல்வி அமைச்சு, இலாகாகளில் கல்வி அதிகாரிகள் என்று மிகப் பெரிய மனித வளத்தைக் கொண்டு இயங்கும் அரசு சார்ந்த கல்வி அமைப்பாகும்.

இதனைத் தவிர்த்து தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும் பள்ளி மேலாளர் வாரியங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி சமுதாயம் தொடர்புள்ள கல்வி சார் மேம்பாட்டு இயக்கங்களாக உள்ளன. மேலும் பல அரசியல் அமைப்புகள், அரசு சாரா பொது இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மேல் கூறிய அனைவரும் மிகப் பெரிய பங்களிப்பைத் தொடர்ச்சியாக தந்து தமிழ்ப்பள்ளி எனும் இவ்வமைப்பைக் கட்டிக் காத்து வருகின்றனர்.

தற்சமயம் நாட்டில் 525 தமிழ்ப்பள்ளிகள் இயங்கும் நிலையில் மேலும் 5 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டுமானத்தில் இருப்பது மகிழ்ச்சிக்குறிய விசயமாகும். சுதந்திரத்திற்குப் பின் பல சவாலான நிலைகளைத் தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கியதும் குறிப்பாக தனது புற தோற்றத்தில் பலகைகளிலான கட்டடத்திலும், போதுமான வசதிகள் இன்றியும், நிலம் தனியாருக்குச் சொந்தமாகவும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியிருந்தன.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசின் கவனம் தமிழ்ப்பள்ளிகளின் மீது பட்டது அதிர்ஷ்டமாகும். PTST எனப்படும் தமிழ்ப்பள்ளிகள் திட்ட வரைவுக்குழு, இந்திய கல்வித் துணை அமைச்சர் நியமனம், முதன் முறையாக 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் உட்பட ரிம 1 பில்லியனுக்கான மேம்பாட்டு திட்டங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்காலமாக அமைந்தது.

மலேசியாவில் தொடக்கப் பள்ளிகள்

மலேசியாவில் மொத்தம் 7,696 தொடக்கப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 5872 பள்ளிகள் தேசியப் பள்ளிகள், 1299 சீனப்பள்ளிகள், 525 பள்ளிகள் அல்லது 7 % தமிழ்ப்பள்ளிகளாகும்.

கீழ்கண்ட அட்டவணை 1 மலேசியாவில் மொத்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை விவரங்களைக் காட்டுகின்றது.

525 தமிழ்ப்பள்ளிகளில் அரசு பள்ளிகள்* 160(30%), அரசு உதவிப் பெற்ற பள்ளிகள்** 365(70%) ஆகும்.

*அரசு பள்ளிகள் (SK-Sekolah Kerajaan – Bantuan Penuh) என்பது அரசின் முழு உதவிபெற்ற  பள்ளிகள் ஆகும். நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்ற நிலையில் அனைத்து கல்வி மற்றும் பள்ளி கட்டட கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

**அரசு உதவிப் பள்ளிகள் (SBK-Sekolah Bantuan Kerajaan – Bantuan Modal) என்பது அரசின் பகுதி உதவிபெற்ற பள்ளிகள் ஆகும். நிலம் தனியாருக்குச் சொந்தம் என்ற பட்சத்தில் பள்ளி கட்டட கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பள்ளி – பள்ளி மேலாளர் வாரியம் மேற்கொள்ளும் வேளையில், கல்வி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

மொத்தம் 32 மில்லியன் மக்கள் தொகையில் இந்திய மக்களின் தொகை 2 மில்லியன் அல்லது 6.25%-ஆக இருக்கும் நிலையில் 7% என்பது சரியான விழுக்காடாக தோன்றினாலும், 50% இந்திய பெற்றோர்கள் தேசியப்பள்ளிக்கும் சீனப்பள்ளிக்கும் தங்களது பிள்ளைகளை அனுப்புவது தமிழ்ப்பள்ளிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

மலேசியாவில் உள்ள 11 மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகள் இயங்குகின்றன. மிகப் பெரிய எண்ணிக்கை பேராக்கிலும், தலா ஒரு பள்ளி கொண்ட மாநிலங்களாக பெர்லிஸ் மற்றும் கிளந்தான் விளங்குகின்றன.

தமிழ்ப்பள்ளிகள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்தாலும் குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் நிலை தலையாய சவாலாக உருவெடுத்துள்ளது. இச்சவால் முக்கியமான ஒன்றா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சில பொது அமைப்புகள் அரசின் இடையீடு தேவை என்று கருதுகின்றன.

குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள்

மேற்கூறியது போல குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலத்திற்கு மிக சவாலான சிக்கலாக அமையலாம். 387 (74%) தமிழ்ப்பள்ளிகள் புறநகரங்களில் குறிப்பாக தோட்டத்தில் அமைந்திருப்பதாலும் 1990-களுக்குப் பிறகு துரித மேம்பாட்டு வளர்ச்சியின் காரணமாக இந்தியர்கள் தோட்டப் புறத்தை விட்டு வெளியேறியது தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் சரிவுக்குப் மிகப் பெரிய காரணமாக தெரிகிறது.

கல்வி அமைச்சின் வரையறைப்படி 150-க்கும் குறைவான மாணவர்கள் ஒரு பள்ளியில் ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை பதிவு பெற்றிருந்தால் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை SKM – Sekolah Kurang Murid என்று அழைக்கின்றனர்.  இதன் அடிப்படையில் பார்த்தால் 525 தமிழ்ப்பள்ளிகளில் 365 அல்லது 70% பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளியாக திகழ்கின்றன. மீதமுள்ள 160 அல்லது 30% பள்ளிகள் 150-க்கும் மேலாக மாணவர்களைக் கொண்டுள்ளன. அட்டவணை 3-ஐ கவனிக்கவும்.

தமிழ்ப்பள்ளிகளைப் பொருத்த வரையில் 80 முதல் 100 வரையிலான மாணவர்களைக் கொண்டிருந்தாலே அதனைப் பெரிய பள்ளியாக கருதலாம். நமது இந்தக் கட்டுரை ஆய்விற்கு உட்படுத்துவது 30-க்கும்  குறைவான (SKM Tegar) மாணவர்கள் கொண்டிருக்கும் பள்ளிகள் ஆகும். இவ்வகையில் 122 அல்லது 23% தமிழ்ப்பள்ளிகள் 30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இதில் பேராக் (34), ஜொகூர் (23) மற்றும் கெடா (20) 30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளைக் கொண்டுள்ளன.

குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டிருப்பதால் கற்றல் கற்பித்தலை எளிதாக மேற்கொள்ளலாம் என்ற முறையில் சிறந்த அடைவு நிலையைக்  கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து இருக்கின்றது. ஆனால், குறைவான மாணவர் – ஆசிரியர் விகிதம் இருக்கும் பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்து இருப்பதாக கிடைத்த ஆதார தரவுகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தக் குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளின் பின்னடைவுகளைக் பின்வருமாறு குறிக்கலாம்:

  • i. கல்வி வசதிகள் குறைந்த குறிப்பாக கற்றல் கற்பித்தலுக்குப் போதுமான வசதிகள் இன்மை;
  • ii. குறைந்த தேர்ச்சி அடைவு நிலைகள்;
  • iii. பன்மை வகுப்புகள் (Kelas Cantuman) குறிப்பாக 30-க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் 2018-ஆம் ஆண்டு  தொடக்கம்     அமுலில் இருந்து வருகின்றது;
  • iv.மாணவர்களுக்குச் சக நண்பர்கள் இன்மை மற்றும் போட்டித்தன்மை இல்லாமை;
  • v. கட்டட, வெளிக் கட்டமைப்பு வசதிகள் குறைந்த சிறிய பள்ளிகள்;
  • vi. கட்டட கட்டமைப்பு மோசமான நிலையால்  அதிக பராமரிப்பு தேவைகளைக் கொண்டுள்ள பள்ளிகளாக உள்ளன;
  • vii.மேம்பாட்டிற்கு வழி வகை இன்மை;
  • viii.தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தன்முனைப்பு இன்மை;
  • ix. பள்ளி நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் விகிதம் அதிக செலவு சுமைகள்/ உடல் உழைப்பு
  • x. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு ஏற்றி வருவது. ஆசிரியர்கள் வர இயலாத பட்சத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாமை;
  • xi.பள்ளி மேலாளர் வாரியங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் போக்குவரத்து வசதிகள் அவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் சுமையாக அமைதல்;  மேலும் பலவற்றை வரிசைப்படுத்தலாம்.

இந்த குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மட்டும் தான் நமது சவாலா?

மற்ற சவால்கள் என்ன என்பதனைக் கவனிப்போம்.

இதர பெரிய சவால்கள்

மாணவர்கள் எண்ணிக்கை சரிவு நிலை

2011ல் 102,642 மாணவர்கள் இருந்த நிலையில் தொடர்ந்து சரிவு கண்டு 2019ல் 81,321 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில்  உள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில்  21,321(20%) மாணவர்களின் எண்ணிக்கை சரிவை தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கியுள்ளன. அட்டவணை 4 2011 முதல் 2019 வரை மாணவர்கள் சரிவை காட்டுகின்றது.

எந்த ஒரு இடையீடு திட்டமும் (Intervention Plan)  இல்லாத தருணத்தில் இந்த குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளை இயற்கையாக இழக்க நேரிடலாம். 26 பள்ளிகள் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருப்பது பள்ளிகளை இழக்கும் நிலை வெகு தூரம் இல்லை என்பதனைக் காட்டுகின்றது.

வகுப்பறைகள் எண்ணிக்கை சரிவு நிலை

வகுப்பறைகள் எண்ணிக்கை சரிவு தகவல்   புதியதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் அமையலாம். 2011 ஆண்டு 4,728 என்று இருந்த வகுப்பறை எண்ணிக்கை தொடர் சரிவு கண்டு 2018-இல் 4,425 ஆக குறைந்துள்ள வேளையில் 2019-இல் 22 வகுப்பறைகள் கூடி 4,447-ஆக உள்ளது.  கடந்த 9 ஆண்டுகளில் 281  வகுப்பறைகளை தமிழ்ப்பள்ளிகள் இழந்துள்ளன.

அட்டவணை 5, 2011 முதல் 2019 வரை தமிழ்ப்பள்ளிகளில் வகுப்பறைகள் எண்ணிக்கையைக் காட்டுகின்றது.

இதில் கவனிக்க வேண்டியது 281 வகுப்பறைகள் என்பது 47 பள்ளிகளுக்கு சமமாகும் (ஒரு பள்ளி 6 வகுப்பறைகள் என்ற கணக்கில்).

தேசிய மற்றும் சீனப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள்

ஏறக்குறைய தமிழ்ப்பள்ளிக்குச் சமமான 80,000 மாணவர்கள் தேசிய மற்றும் சீனப்பள்ளிகளில் பயில்வதாக தெரிகின்றது. தமிழ்ப்பள்ளிகளை வலுவிழந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். இந்த 50% மாணவர்களைத் தமிழ்ப்பள்ளி பக்கம் இழுக்க சீரிய திட்டம் வேண்டும்.

தீர்வுகள்

தமிழ்ப்பள்ளிகளில் நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இல்லையேல் கடந்த 60 ஆண்டுகள் போல் எதிர்காலத்தில் மேலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனைகள் சவாலாக தொடரலாம்.

இரண்டு வகையான தீர்வுகளைப் பார்க்கலாம்.

குறுகிய கால அடிப்படையிலான தீர்வுகள்

மாணவர்கள் சேர்க்கை திட்டங்கள் – குறிப்பாக தேசிய மற்றும் சீனப்பள்ளிகளில் உள்ள 80,000 மாணவர்களை கவர்ந்து இழுக்கும் திட்டங்கள்;

தமிழ்ப்பள்ளிகளில் தலைமையாசிரியர் / நிர்வாகம் / ஆசிரியர்களின் பல்வேறு திறனை மேம்படுத்துதல்;

தமிழ்ப்பள்ளிகளில் கல்வி மற்றும் புறப்பாட அடைவு நிலை முன்னேற்ற திட்டங்கள்;

மாணவர்களுக்குப் போக்குவரத்து உதவி தொகை திட்டம்.

நீண்ட கால அடிப்படையிலான தீர்வுகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு இணைக் கட்டடம் அல்லது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் – பல (பெரிய) பள்ளிகள் வகுப்பறைகள் அல்லது கல்வி வசதி இல்லாததால் மாணவர்களை இழந்து வருகின்றன. இப்பள்ளிகளைக் கண்டறிந்து துரிதமாக கட்டுமான திட்டங்களைச் செயல் படுத்தல்;

பாலர் பள்ளி அமைத்தல் மிக முக்கியமான  குறிப்பாக மாணவர்கள் சேர்க்கைக்கு உதவும் திட்டமாக கருதப்படுகிறது. 2019-இல் திறக்கப்பட்ட  31 பாலர் பள்ளிகளும் நிறைவான மாணவர்களைக் கொண்டு இயங்குகின்றன. மேலும் 2020-இல் முதலாம் ஆண்டில் அதிக மாணவர்கள் இணைவதற்குத் இப்பாலர் பள்ளிகள் தத்தம் பள்ளிகளுக்கு உதவியுள்ளன;

தங்கும் விடுதி பள்ளிகள். இந்திய பெற்றோர்களிடத்தில் இத்திட்டத்தின் ஆர்வத்தைக் கண்டறிதல் வேண்டும்.  சா ஆலம் தமிழ்ப்பள்ளி ஒன்றில் இத்திட்டம் 2020-இல் தொடங்கப்பட்டுள்ளது. புறநகர் மாணவர்களைச் சேர்க்க இத்திட்டம் உதவலாம்;

சிறப்பு பள்ளிகள் (விளையாட்டு) – ஒரு சில பள்ளிகள் நல்ல திடல்களைக் கொண்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு திட்டங்களின் மூலம் அதிகமான மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் இணையக்கூடும்;

பள்ளி இடமாற்றம் – தலையாய திட்டமாக கருதப்படுகிறது. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இந்தியர்கள் அதிகமாக உள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்வது இதன் நோக்கமாகும். சிறந்த திட்டமாக இருந்தாலும் மிக சவாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக புதிய நிலத்தை அடையாளம் காணுதல், நிலத்தை அரசாணையில் பதிவு செய்தல். கல்வி அமைச்சின் ஒப்புதல் பெறுதல், கட்டட நிதி, கட்டுமானம் என்று தொடர் செயல் நடவடிக்கைகள் தேவை.

கூட்டுத் தமிழ்ப்பள்ளி திட்டம் – இத்திட்டத்தில் ஒரு வட்டாரத்தில் உள்ள சிறுப்பள்ளிகளை அடையாளம் கண்டு இந்தியர்கள் அதிகமாக உள்ள இடத்தில்  ஒன்றிணைத்து கூட்டுப்பள்ளியாக மேம்படுத்துவதாகும்.  கூட்டுத்தமிழ்ப்பள்ளி திட்டம் புதியது அல்ல. இத்திட்டம் 1960-களிலும் மீண்டும் 1980-களில்

மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில வட்டாரங்களில் குறிப்பாக பேராக், கெடா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் மிகக் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் இருப்பதால் காலத்தின் கட்டாயமாக இத்திட்டத்தைச் செயல் படுத்தப்படலாம். இல்லையேல் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகள் இயற்கையாக மூடப்படலாம். இருப்பினும் இதை ஓர் அச்சுறுத்தல் திட்டமாகவே இந்திய சமுதாயம் கருதுகிறது, குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறையக்கூடாது என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. இதற்கு மாற்று கருத்தாக எண்ணிக்கையைவிட தமிழ்ப்பள்ளியின் கல்வி தரம் வேண்டும் என்று மற்றொரு சாரார் கருதுகின்றனர்.

முன்னெடுப்பு செயல்கள்

மேற்கண்ட சவால்கள் எதிர்கொள்ள பின்வரும் செயல்களை நாம் முன்னெடுக்கலாம். அவை:

தமிழ்ப்பள்ளி நடவடிக்கை செயலகம் – கடந்த காலங்களில் இருந்தது போல அரசாங்கம் தமிழ்ப்பள்ளி மேம்பாடு நடவடிக்கைகளைக் கவனிக்க நிரந்தர செயலகம் ஒன்றை அமைத்தல் வேண்டும். இந்த செயலகம் புதிய திட்டங்களைத் தீட்டவும், தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்குக் குறிப்பாக குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்குத் தீர்வு வழங்க செயல் திட்டங்களை அரசுக்கு வழங்க வேண்டும். இதனை அமைக்க அரசியல் ரீதியான முயற்சிகள் தேவை.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் சாத்தியக்கூறு ஆய்வு  – தமிழ்ப்பள்ளிகளின் நில, கட்டடம், கட்டமைப்பு சார்ந்த தகவல்கள் மிக குறைவாக இருப்பதால் மேம்பாடு வரைவு திட்டங்களைத் தொழில்நுட்ப மற்றும் பூகோள ரீதியாக கையாள முடியவில்லை. இதனைக் களைவதற்குச் சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) ஒன்றைத் தமிழ்ப்பள்ளி நடவடிக்கை செயலகம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சனை பெரியதா? சிறியதா? என்பதனைச் சமுதாயம் நிர்ணயிக்க வேண்டும். தீர்வுகள் அனைத்தும் தரமான கல்விக்கு வழிவகுத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவூட்டுவதாக இருத்தல் வேண்டும்.  எதுவாகினும் துரித திட்டங்கள் தேவை என்பது நமக்கு கண்முன்னே தெரிகிறது.