உபகாரச் சம்பளத்துடன் ஆசிரியர் பயிற்சி – குமரன் வேலு

கடந்த ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கற்பிக்க ஆசிரியர் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதாகக்

கல்வியமைச்சுக் கூறி வருகிறது. நாம் அறிந்தவரை நாடு தழுவிய அளவில் 800-900 பயிற்சிப்பெற்ற இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியரின் தேவையும் மேலதிக எண்ணிக்கையை எட்டிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை எனும் போக்கில், இவ்வாண்டு தொடக்கப் பள்ளித் தமிழாசிரியர் பயிற்சிக்குப் புதிய ஆசிரியர்கள் தேவையில்லை எனக் கல்வியமைச்சு அறிவித்தித்திருக்கிறது.

கட்டுரையாளர் முனைவர் இரா குமரவேலு

பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி வழங்கும் உப்சி பல்கலைக்கழகத்தில், அரசாங்க உபகாரச் சம்பளத்துடன் பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்கனவே வழங்கப்படவில்லை. மலாயாப் பல்கலைக்கழகத்தில், மொழியியல் அல்லது இந்திய ஆய்வியல் துறையில் படித்து, ஆசிரியர் பட்டயம் பெற்று, இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகவோ தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவோ விண்ணப்பம் செய்யவிருக்கும் பலருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கும்.

ஆசிரியருக்கான தேவை மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்தது என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.

தமிழ்ப்பள்ளியில் இருந்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கையும் வீழ்ச்சிக் கண்டு வருகிறது. மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்தே ஆசிரியருக்கான தேவையும் அதிகரிக்கிறது என்பது கண்கூடு.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலர் இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழிப் பாடத்தை எடுப்பதில்லை என அறிகிறோம். முதலாம் படிவத்தில் தமிழ்மொழியைப் படிக்க வாய்ப்புக் கிட்டாத மாணவர்கள் தொடர்ந்து அந்தப் பாடத்தை எடுப்பதற்கு விருப்பம் காட்டுவதில்லை.

இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழ்ப்பாடம் எடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். பள்ளியின் தலைமையாசிரியர்களைத் தமிழ்மொழிச் சார்ந்த இயக்கங்கள் அணுகி உதவிக் கோரவேண்டும்.

தாய்மொழியின் தேவையைப் பற்றி பெற்றோரிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்மொழிப் பாடம் படித்துக் கொடுக்கும் ஆசிரியர்கள் உள்ள இடைநிலைப் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டும். அறிவியல் துறை மாணவர் என்றாலும், தனியேக் கூடுதல் வகுப்பு எடுத்தாவது தமிழை ஒரு பாடமாக எடுக்க பிள்ளைகளை வற்புறுத்த வேண்டும்.

கல்விச்சட்டம், ஒரு பள்ளியில் 15 மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டால் தாய்மொழிப் பாடம் படிக்கலாம் என்கிறது. 15 என்பது ஒரே படிவத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்று பொருள் கொள்ளாது, எந்தப் படிவத்தில் படித்தாலும் 15 மாணவர்களுக்கும் குறையாத எண்ணிக்கையில் இருந்தால் அங்குத் தமிழை ஒரு பாடமாக, பள்ளி வேளையில் அல்லது பள்ளி நேரத்திற்குப் பிந்திய நேரத்தில் படிக்கலாம், அரசு அதற்கு நிதி வழங்கும்.

எசு.பி.எம் (SPM) தேர்வில் தமிழ்மொழிப் பாடம் எடுப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்குத் தமிழ்ப்பள்ளியில் பதியும் மாணவர் எண்ணிக்கை குறைவதும் ஒரு காரணம். இலக்கியப்பாடம் எடுப்போர் எண்ணிக்கையும் அதிகரித்தால் நல்லது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, 14,800 தமிழ் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றனர். அந்த எண்ணிக்கை 2019-இல் 13,500 ஆகக் குறைந்து விட்டது.

2016-ஆம் ஆண்டு, எசு.பி.எம் தேர்வில், தமிழ்மொழியை எடுத்தோர் எண்ணிக்கை ஏறக்குறைய 9000 பேர்கள். தமிழ் இலக்கியம் எடுத்தோர் எண்ணிக்கை ஏறக்குறைய 3000 பேர்கள்.

ஏறத்தாழ 5000 பேர் தமிழ்மொழியை எசு.பி.எம் தேர்வில் எடுக்கவில்லை அல்லது எடுக்க வாய்ப்புக் கிட்டவில்லை என்றே பார்க்க வேண்டும். இவர்கள் தமிழ் எடுத்திருந்தால் படித்துக் கொடுக்க ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும்.

தமிழ்ப்பள்ளிக்கும் இடைநிலைப் பள்ளிக்குமான தமிழாசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  1. தமிழ்ப்பாடம் எடுக்கும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களுக்குத் தமிழ்ப்படிக்கும் வாய்ப்பை அதிகரிப்பதன் வழி ஏற்படுத்தலாம்.
  2. தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை முடுக்கிவிட வேண்டும்
  3. தமிழ்மொழிப்பாடம் எடுக்கும் மாணவருக்கு ஊக்கத்தொகை, கூடுதல் வகுப்புக்கு நிதி உதவி கொடுக்கலாம்
  4. தேசியப் பள்ளியில் இருந்து வரும் தமிழ்மாணவர்கள் இடைநிலைப் பள்ளியில் அடிப்படைத் தமிழ் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

நம்முடையப் பொறுப்பில்லாப் போக்கால் வருகின்ற வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம் என்பதே உண்மை. 80 விழுக்காடு தமிழர்கள் எப்போது இதை உணர்வார்களோ!

தமிழ் ஆசிரியரின் தேவை அதிகரித்தால், கல்வியமைச்சு உபகாரச் சம்பளத்தோடு பயிற்சியை வழங்கும். பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்களின் தேவையும் அதிகரிக்கும். எல்லாம் ஒரு சங்கிலித் தொடர்புதான்.

தாய்மொழிப்பற்று, மொழி உணர்வு மொழிக்கான வேலை வாய்ப்பையும் அதிகரிக்க உதவும். இதற்குத்தான் நம் இனத்திற்கு மொழிப்பற்று தேவை என்று தலைப்பாடாக அடித்துக் கொள்கிறோம்.