கோவிட் இருக்கா, இல்லையா? எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள்!

கவிதா கருணாநிதி – நாம் கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று மூன்று பரிசோதனைகளின் வழி தெரிந்து கொள்ளலாம்.இந்த மூன்று கோவிட் பரிசோதனைகளும் வெவ்வேறு வகைப்படும்.

முதல் பரிசோதனை வகை மொலெகுலர் டெஸ்ட்(Molecular Test) எனப்படுவதாகும். பி.சி.ஆர் டெஸ்டிங் (PCR Testing) இந்த வகையைச் சார்ந்ததாகும்.  நம் மூக்கின் வழியே  அடித்தொண்டையைப் பஞ்சு கொண்ட ஒரு சிறு குச்சியால் சுரண்டி, அதில் கிடைப்பதைக் கொண்டு இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இப்பரிசோதனையில் வைரசின் ஆர். என். எ (RNA) காணப்படுகிறதா இல்லையா என்று அறிந்து கொள்ளலாம். இப்பரிசோதனை மிகவும் துல்லியமான முடிவுகளைக் காட்டக்கூடும். இப்பரிசோதனை முடிவுகள் தெரிவதற்குச் சுமார் இருபத்து நான்கு மணி நேரம் வரை எடுக்கும்.

இரண்டாவது பரிசோதனை வகை ரெபிட் அன்டிஜென் டெஸ்ட் (Rapid Antigen Test) ஆகும். இப்பரிசோதனை மேலே குறிப்பிட்ட முதல் பரிசோதனையை மேற்கொள்ளும் வழிமுறையைப் பின்பற்றுகிறது. ஆனால், இப்பரிசோதனை வைரசின் அன்டிஜென் (Antigen) பகுதியை மட்டுமே காண்பிக்கக்கூடும். எனவே, சுமார் பதினைந்து நிமிடங்களில் நாம் இப்பரிசோதனையின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். முதல் பரிசோதனையைக் காட்டிலும் இப்பரிசோதனையின் வழி  துல்லியமான விவரத்தைக் காண முடியாவிட்டாலும் நாம் கோவிடினால் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு கோவிட் பரிசோதனைகளும் உங்களுக்குக் கோவிட் தொற்று  அறிகுறிகள் இருந்தாலும் சரி, அல்லது இல்லை என்றாலும் சரி (asymptomatic)  கோவிட் உங்களைத் தாக்கியுள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ளலாம். அப்படி உங்களுக்குக் கோவிட் தாக்கியுள்ளது உறுதி (Positive) என்றால், மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க உங்களை நீங்கள் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது பரிசோதனை என்டிபோடி டெஸ்ட்( Antibody Test) ஆகும். இப்பரிசோதனையை மேற்கொள்ள ஒருவர் இரத்தச் சோதனை செய்ய வேண்டும். கோவிட் வைரஸை எதிர்த்துச் செயல்படும் அன்டிபோடி(Antibody) நம் உடலில் காணப்படுகிறதா என்று இப்பரிசோதனையின் வழி அறிந்து கொள்ளலாம்.  கோவிட் வைரஸ் நம்மைத் தாக்கியவுடன் நம் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு(Immune system) வைரஸ்கு எதிராகச் செயல்பட என்டிபோடியை உருவாக்கும்.

நாம் நோயிலிருந்து குணமடைந்து விட்டாலும்  அதே வைரஸால் நாம் மறுபடி தாக்கப்படும்போது அதை எதிர்த்துச் செயல்பட என்டிபோடி நம் இரத்தத்தில் உள்ளடங்கியிருக்கும். இப்பரிசோதனையில் என்டிபோடி காணப்பட்டால் சில நாட்களுக்கு முன்பு நாம் வைரஸால் தாக்கப்பட்டுள்ளோம் என்பதைத்  தெரிந்து கொள்ளலாம். ஆனால், நாம் இப்பொழுது இவ்வைரஸால் தாக்கப்பட்டுள்ளோமா என்பதை  அறிய முடியாது.