தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிப்பதில் இஸ்ரேல் வெற்றி – கவிதா கருணாநிதி

உலக அளவில் இரட்டையர்கள் பிறப்பின் சதவிகிதம் சுமார் 1.1% ஆகும். ஒரே கருமுட்டையில் ஒரே உருவம் (Identical twins) கொண்டு பிறப்பவர்களின் சதவிகிதம் 0.3% ஆகும். அதிலும், கிரேனியோபேகஸ் (Craniopagus twins) என்று அழைக்கப்படும் தலைப் பகுதி ஒட்டிய இரட்டையர்கள் 2.5 மில்லியனில் ஒன்று மட்டுமே பிறக்கின்றது. இப்பிறப்பின் வகை மிகவும் அபூர்வமாகும்.

பொதுவாக இரட்டையர்கள் இரண்டு வகைப்படுவர். முதல் வகை இரண்டு கருமுட்டையும் இரண்டு உயிரணுக்களும் கலந்து பிறக்கும் வெவ்வேறு தோற்றமுடைய குழந்தைகள் (Non- identical twins) ஆகும். இவர்கள் வெவ்வேறு பாலினமாகக் கூட இருக்கலாம்.

அடுத்து ஒரு கரு வளர்ச்சியின் போது இரண்டாகப் பிரிந்தால் ஒரே தோற்றமும் பாலினமும் கொண்ட குழந்தைகள்(Identical twins) பிறக்கும். ஆனால், பதிமூன்று நாட்களுக்குப் பிறகு கரு பிரிந்தால் இரட்டையர்கள் ஒட்டிப் பிறக்கின்றனர். இவர்களைக் கொஞ்சோயின்ட் டிவின்ஸ் (Conjoined twins) என்று அழைப்பார்கள்.

ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களை அறுவைச் சிகிச்சையின் வழி பிரித்து விடுவார்கள். ஆனால், இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல் என்று முக்கியப் பாகங்கள் இணைந்திருந்தால் அறுவைச் சிகிச்சையின் போது பெரிய அளவில் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும். இவ்வாறு ஒட்டிப் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50% ஒரு குழந்தை இறந்து பிறக்கின்றது. மேலும், மூன்றில் ஒரு குழந்தை இருபத்து நான்கு மணி நேரத்தில் இறந்து விடுகின்றது.

1952யில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஓஸ்கார் சுகர் ஒரு வயதுடைய  கிரேனியோபெகஸ் இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கினார். பன்னிரெண்டு மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இரு குழந்தைகளும் உயிர் பிழைத்தனர்.

ஆனால், முப்பத்தி நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தையும் பதினொரு வயதில் மறு குழந்தையும் இறந்துவிட்டது. வரலாற்றில் பொறிக்கப்பட்ட முதல் கிரேனியோபெகஸ் அறுவைச் சிகிச்சையாக இது அமைகின்றது.

உலக அளவில் பதினாறு கிரேனியோபெகஸ் அறுவைச் சிகிச்சையில் பதினொரு சிகிச்சை வெற்றிகரமாகச் நடைபெற்றுள்ளது. தற்போது உலகளவில் வெற்றிகரமாக சிகிச்சையை முடித்த நாடுகளில்  பதினாறாவது இடத்தில் இஸ்ரேல் தடம்பதித்துள்ளது.

இந்த ஆண்டு, பீர்ஷீபா நகரத்தில் சொரொகா மருத்துவமனையில் பன்னிரெண்டு மணி நேரக் கிரேனியோபெகஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஒரு வயது நிறைவடைந்த இரண்டு பெண் குழந்தைகளும் ஒருவரை ஒருவர் காண முடிந்தது. இஸ்ரேலில் இருந்த திறமையான மருத்துவர்களும் வெளிநாட்டிலிருந்து வந்த கைதேர்ந்த மருத்துவர்களும் இணைந்து இச்சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.

அவர்களால் இப்பொழுது சுயமாகச் சுவாசிக்கவும் உண்ணவும் முடிகின்றது என்று சொரொகா பிலாஸ்டிக் அறுவைச் சிகிச்சை குழு நிபுணர் (The head of Soroka’s plastic surgery department) எல்டட் சில்பெர்ச்டென் கூறினார். 2020 ஆகஸ்ட் மாதத்தில் தலைகள் ஒட்டிப் பிறந்த இந்த இரட்டையர்கள் இப்பொழுது சுதந்திரமாக எல்லோரும் போல் தங்கள் வாழ்க்கை மேற்கொள்ள முடியும் என்று கூறப்பட்டது.