அயல் நாட்டவரை திருமணம் செய்யும் பெண்களின் வழி குழந்தைகளுக்கும் குடியுரிமையை – அரசாங்கம் ஏற்க வேண்டும்  

 கி.சீலதாஸ் – சமீபத்தில் உயர்நீதிமன்றம் மலேசிய குடிமகளின் கணவர் வெளிநாட்டவர் என்றபோதிலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையானது ஆணுக்குக் கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை, உரிமையை அதாவது மலேசிய குடிமகன் வெளிநாட்டு பெண்ணை மணந்து பிள்ளை பெற்றால் அந்தக் குழந்தை இயல்பாகவே மலேசிய குடியுரிமை பெறுவது போல், மலேசிய பெண்ணுக்கும் அந்த உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதானது நியாயமானதாகும்.

அரசமைப்புச் சட்டத்திற்கும் உட்பட்ட நீதிபரிபாலனம் எனலாம். மனிதநேயத்திற்குத் தரப்படும் மரியாதை என்று கூட சொல்லலாம்.

நீதிமன்றத்தின் இந்த நியாயமான, விவேகமான தாய்குலத்தை மதிக்கும் வியாக்கியானத்தை நடுவண் அரசு ஏற்றுக்கொள்வதுதான் தர்மத்தின் அடையாளம் எனலாம். ஆனால், நடுவண் அரசு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை எதைக் குறிக்கிறது?

மலாயா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி டான் ஶ்ரீ சித்தி நோர்மா யாக்கூப். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, மேல்முறையீட்டு, கூட்டரசு ஆகிய உயரிய நீதிமன்றங்களில் சேவையாற்றினார். நீதித்துறையில் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல; ஆண்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை மெய்பித்தாக அமைந்தது அன்னாரின் மலாயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

இன்று மலேசியாவின் தலைமை நீதிபதியாக இருப்பவர் துங்கு மைமுன் துவான் மாட், நீதித்துறையில் உச்சக்கட்டத்தை அடைந்த மற்றொரு பெண்மணி ஆவார்.

இந்த நாட்டின் முதல் துணைப் பிரதமராகத் திகழ்ந்தார் டத்தின் வன் அஸிஸா. அவர் மட்டும் பல ஆண் அரசியல்வாதிகள் போல் பேராசை கொண்டிருப்பாரேயானால் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். பல கட்சிகளுடன் கண்ட ஒப்பந்தத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை அவர் மதித்தார், காப்பாற்றினார். பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்தார்.

மலாயாவின் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துன் ஃபாத்திமா ஹஷீம். பிரதமர் துங்கு அப்துல் இரஹ்மானின் அமைச்சரவையில் அங்கம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை அவரைச் சாரும். தேசிய பொருளகத்தின் (பாங்க் நெகரா) ஆளுநராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி டான் ஶ்ரீ டாக்டர் உங்கு ஜிட்டி அக்தார் உங்கு அப்துல் அசிஸ்.

மாநில சட்ட ஆலோசகர் வரிசையில் டத்தோ மேரி லிம் தியாம் சுவான், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்ட ஆலோசகராகச் சேவை ஆற்றினார். அப்படிப்பட்ட பொறுப்பை வகித்த முதல் மலாய்க்காரர் அல்லாதவர் வரிசையில் சேர்ந்தவர் அவர். உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற பொறுப்பை வகிக்கும் பெண்மணி டத்தோ நலினி பத்மநாதன் அவருக்கும் இந்தப் பெருமை சாரும். இவர்கள் அன்றி பல துறைகளில் பெண்கள் உயர்ந்த நிலையை அடைந்து சிறப்புடன் சேவையாற்றுகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. இந்த உண்மையை அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது என்பதும் கண்கூடு.

பெரும் பொறுப்புகளில் ஏற்று சிறப்புடன் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுகின்ற திறனும், ஆளுமையும், துணிவும் பெண்களுக்கு உண்டு என்பதை மேலே குறிப்பிடப்பட்டவர்கள் நிரூபித்துள்ளார்கள். இது எதைக் குறிக்கிறது? ஆண்களுக்குப் பெண்கள் ஒப்பானவர்களே அன்றி அறிவில், திறமையில், துணிவில் கிஞ்சித்தும் குறைந்தவர்கள் அல்ல; நிகரானவர்கள் என்பதைத்தானே தெளிவுபடுத்துகிறது!

பெண்கள் ஆண்களோடு சரிசமமாக அதிகாரப் பொறுப்புகளில் அமர்வதற்கு ஏதுவாக இருப்பது என்ன என்பதைக் கவனித்தால் நாம் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் பிரிவைத் துணைக்கு அழைப்பது இயல்பு. அந்தப் பிரிவு என்ன சொல்கிறது? எல்லா நபர்களும் சட்டத்தின் முன் சமம். எனவே, சட்டத்தில் சம பாதுகாப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அடுத்து, அரசமைப்புச் சட்டத்தால் தவிர்க்கப்பட்டால் அன்றி குடிமக்கள் சமயம், இனம், மரபு வழி, பிறந்த இடம், பால் பாகுபாடற்ற முறைக்குப் பாதுகாப்பு உண்டு என்கிறது. இந்த எட்டாம் பிரிவின் இரண்டாம் சட்டக் கூறு குடிமக்கள் யாவரும் சமம், பாராபட்சத்திற்கு இடமில்லை என்கிறது.

ஒரு சட்டம் இயற்றப்படும்போது அது அரசமைப்புச் சட்டத்தின் 8(2)ஆம் பிரிவை மனத்தில் கொண்டிருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் நினைப்பதுதான் சட்டம், அவர்களின் வியாக்கியானம்தான் சரி எனப் பிடிவாதமாக இருந்தால் என்ன சொல்வது? நீதிமன்றம்தான் ஒரு முடிவான, தீர்வு காண வேண்டிய நிலைக்கு உந்தப்படும்.

குடியுரிமையைப் பற்றி அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? மலேசிய தினத்துக்கு முன்னர் (16.09.1963) பிறந்த நபர், அவரின் பெற்றோர்களில் ஒருவர் மலேசிய குடியுரிமை பெற்றிருந்தால் அல்லது நிரந்தரமாகக் கூட்டரசில் குடியிருப்பவர் என்றால் அவர் மலேசிய குடியுரிமை பெறத்தக்கவர் ஆவார். [காண்க: அரசமைப்புச் சட்டப் பிரிவு 14(1)(b).

இதன் பின்னிணைப்பு, இரண்டாம் பாகம் 1(b) பிரிவோடு சேர்த்து படிக்கவும்]. இந்த இணைப்பில் பெற்றோர் என்ற சொல் ஒருமையில் கூறப்பட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். இதில் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர் எனின் தாய் தந்தை இருவரையும் குறிக்கும். இந்த நிலையை இந்திரா காந்தி வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆணும், பெண்ணும் சமம். இரு பாலினரும் சம உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, ஒரு மலேசிய ஆண்மகன் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறார், குழந்தையும் பிறக்கிறது. அந்தக் குழந்தையின் பிறப்பை மலேசிய தூதரகத்தில் பதிவு செய்தால் அந்தக் குழந்தை தந்தை வழியாக மலேசிய குடியுரிமை பெறுகிறது. ஆனால், ஒரு மலேசிய பெண் வெளிநாட்டவரை மணந்து குழந்தை பெற்றால் அந்தக் குழந்தைக்கு மலேசிய குடியுரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட சலுகை, உரிமை யாவும் தாய்குலத்துக்கு மறுக்கப்படுவது ஏன்? தெளிவான காரணம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. அறிவுடைய காரணம் ஏதாவது தென்படுகிறதா? அதுவும் இல்லை. சட்டத்தைச் சுட்டிக்காட்டி மலேசிய குடிமகனுக்கு அரசமைப்புச் சட்டம் கொடுக்கும் உரிமை, சலுகை பெண் வர்க்கத்திற்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அப்படிப்பட்ட வியாக்கியானம் ஏற்புடையது என்றால் அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் கூறினால் அதை எந்த நியாயவாதியும் ஏற்றுக்கொள்வதே முறை. அதுதான் அரசியல் விவேகம்.

ஆனால், சட்டச் சிக்கலை உருவாக்குவது அல்லது வியாக்கியான பிரச்சினைகளைக் கிளப்புவது யாவும் தெளிவு தேவை என்ற பேரில் புதுப்புது அணுகுமுறைகளை நாடுவது சட்டத் தொழிலுக்குப் புதியது அல்ல. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் பிரிவு மலேசிய குடிமக்கள் யாவரும் சமம். சமய, இன, ஆண், பெண் பாகுபாடு இல்லை என்று பசுமரத்தாணி போல் பதித்துவிட்ட பிறகு, அதே சட்டத்தின் இணைப்பில் பெண் இனத்துக்கு வழங்கப்பட்ட சம உரிமையை நீக்குவது எந்த வகையில் நியாயமாகும்?

இதைத்தான் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அக்தார் தாஹீர் சுட்டிக்காட்டியுள்ளார். அடிப்படை சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்கியதை, இணைப்புச் சட்டத்தின் வழி அந்த உரிமையைப் பறிப்பது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்பது ஒரு புறம் இருக்க, நீதிபதி அக்தார் அரசமைப்புச் சட்டத்தில் காணப்பெறும் முரண்பாட்டைத் தெளிவான, வியாக்கியான முறையின் வழி தீர்வு கண்டுள்ளார் எனலாம்.

நீதிமன்றத்தின் இந்த நியாயமான, விவேகமான தாய்குலத்தை மதிக்கும் வியாக்கியானத்தை நடுவண் அரசு ஏற்றுக்கொள்வதுதான் தர்மத்தின் அடையாளம் எனலாம். ஆனால், நடுவண் அரசு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை எதைக் குறிக்கிறது?

அரசமைப்புச் சட்டம் ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாலும் அரசியல் கொள்கையில் நாட்டம் கொண்டவர்கள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதுகாறும் வழக்கில் இருந்த பாகுபாட்டைக் கைவிட முடியாது என்ற அதன் நிலைபாட்டை உணர்த்துவது போல் இருக்கிறது. ஒரு சிலர் இரட்டை குடியுரிமையைத் தடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்ற சோடையான காரணத்தை முன்வைக்கிறார்கள். அப்படியானால் ஆண் மட்டும் இரட்டை குடியுரிமை பெறலாமா? நடுவண் அரசின் நியாயமற்ற போக்கைப் பல சமூக அமைப்புகள் கண்டித்துள்ளன. ஜொகூர் மாநில ஆட்சியாளர் கூட மேல்முறையீட்டைக் கைவிடும்படி கூறியுள்ளார். அவரைப் போலவே மற்ற ஆட்சியாளர்களும் முடிவெடுத்தால் வரவேற்றுப் போற்றப்படும். அதோடு மாநில அரசுகளும் ஒருமித்து இந்த விவகாரத்தில் மேல்முறையீடு வேண்டாம் எனத் தீர்மானிப்பதும் போற்றத்தக்க செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

சட்டத்தில் ஆண், பெண் பாகுபாடு குறித்து நியாயமற்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்றால் அந்தத் தவறான போக்கை நிவர்த்தி செய்யும் பொறுப்பு நடுவண் அரசுக்கு உண்டு. நடுவண் அரசு வாளா இருப்பின், அதைத் திருத்தும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உண்டு.

அந்தப் பொறுப்பை அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்க நீதிமன்றம் செயல்படுவதுதான் உண்மையான நீதிபரிபாலனம். இங்கே மற்றுமொரு விஷயத்தைக் கவனத்தில் கொள்வது சிறப்பாகும். அதாவது, ஏற்பட்டிருக்கும் சட்டச் சிக்கலைத் தீர்க்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படலாம். இந்தக் கருத்தில் நியாயம் இருந்தாலும் அந்தத் திருத்த இலக்கை அடைய காலம் பிடிக்கும். நீதிமன்றம் தனது வியாக்கியான அதிகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் காலத்துக்கேற்றவாறு இயங்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவதே முக்கியம்.

அந்தப் பணி, பொறுப்பு நீதிமன்றத்திடம் உண்டு எனின் மிகையாகாது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளில் சட்டத்தைத் திருத்துவதில் கரிசனம் காட்டுவதைத் தவிர்த்து இருக்கும் சட்டத்தைக் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அணுகுவதைக் காணலாம். அதுதான் முக்கியம். அதைத்தான் நம் உயர் நீதிமன்றம் செய்துள்ளது.