இலங்கை அகதியின் கணீர்க் கவி

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

தமிழர்களே
அன்று முள்ளிவாய்க்கால்
வாய்க்கால்களில்
தண்ணீரைவிட அதிகமாய்
எங்கள் கண்ணீரும் செந்நீரும் ஓடியது
கடல் நதியில் சேரவேண்டிய எங்கள் குருதி
ஆனதோ ராஜபக்சேவின்
மடல்செவியில் குறுஞ்செய்தி

மெய்யாகத் தமிழன்
ஒன்றுபட்டிருந்தால் எங்கள்
மெய்கள் இரண்டுபட்டிருக்காது
தமிழீழப் பெண்களின் மெய்மீது
குண்டுகள் குண்டர்கள் கை
இரண்டும் பட்டிருக்காது

உண்ணாவிரதம் இருந்த நீங்கள்
உண்ணாமல் விரதம்இருந்திருந்தால்
எங்கள் ஊனை
அமீபா உண்ணாமல் இறந்திருக்கும்

குண்டு துளைத்து ஓட்டையான
எங்கள் படங்களைக் காட்டி
நீங்கள் ஓட்டைத் தேடிக்கொண்டிருந்தீர்கள்

போரில்
புலிகளின் எண்ணிக்கையோ கரைந்துகொண்டிருந்தது
எங்கள் வயிற்றிலோ புளி கரைந்துகொண்டிருந்தது

நாங்களெல்லாம் வலிகளைச் சுமந்து
வலிமையை இழந்து
புலிகளாக மாறினோம்
நீங்கள் வளமை வல்லமை
படைத்தது முக்கியப் புள்ளிகளை மாறினீர்

இங்கே மீன் பிடிக்க வருவோரை
சிங்களன் மீன்களாகப் பிடித்துக் கொன்றான்

ஜல்லிக்கட்டு மாக்களுக்காக ஒன்றுபட்ட
தமிழ் மக்களே
இங்கே
சல்லடைகளாகும் மக்களுக்காக நீங்கள்
ஒன்றுபட்டிருந்தால்
மாக்கள் வெளியில்
தமிழ் மக்கள் வேலிக்குள் இருந்திருக்கமாட்டோம்

தமிழ் தமிழ் என்று வள்ளுவனின்
குறளை நிறைவாய்க் கொடுத்த நீங்கள்
உங்கள் குரலைத்தான் குறைவாய்க் கொடுத்துவிட்டீர்

எல்லோரும் அணிந்தார்கள் கருப்பு ஆடை
நாங்கள் எவ்வாறு அறிவோம்
அதிலுள்ள கருப்பு ஆடை

இங்கே புத்தன் இருந்தும்கூட
நாங்கள் போதிமரத்திற்கு உரமானோம்

ஈழத் தமிழர்கள் கருப்பு ஆடைகள் அணிந்து
வெள்ளாடுகளாய்க் குனிந்தார்கள்
கருப்பு ஆடுகளோ வெற்றிபெற்று வெள்ளாடை அணிந்தார்கள்

ஐ நா சபையின் நா கூட
எங்களுக்காகத் திறக்கப்படவில்லை

உயிரைப் பணயம் வைக்கும்
விளையாட்டிற்காக காளைத் தலையின் படத்தைபிடித்து
கூட்டம் கூட்டமாய்க் கூடினீர் பாரம்பரியம் என்று
விளையாட்டிற்காகவாவது
உயிரைப் பணயம் வைத்த
எங்கள் புலித் தலையை பிடித்திருந்தால்
கூட்டம் கூட்டமாய் மடிந்திருக்காது
எங்கள் பரம்பரை அன்று

தமிழர்களே அன்று நாம் பட்டிருந்தால் ஒன்று
புலித்தலை எலித் தலையை வென்றிருக்கும் கொன்று
தமிழா ஒன்றுபடு

(குமார்)

-eluthu.com

TAGS: