ஜோ லோ தனவந்தரா? செல்வந்தரா?

‘ஞாயிறு’ நக்கீரன், மலேசிய அரசாங்கத்தால் இமை கொட்டாமல் கண்காணிக்கப்பட்டு வரும் ஜோ லோ என்னும் பெரும் பணக்காரர் தனவந்தரா செல்வந்தரா என்பதில் மின்னல் பண்பலை வானொலி செய்திப் பிரிவினருக்கு தடுமாற்றம் போலும்!

மின்னல் பண்பலை வானொலியின் செய்திப் பிரிவினர் ஆற்றி வரும் சமூதத் தொண்டும் தமிழ்ப் பணியும் பாராட்டத்தக்கன. நாள்தோறும் 18 செய்தி அறிக்கைகளை தமிழ் மொழியில் ஒலியேற்றி மலேசிய இந்திய சமூகத்திற்கு அரசியல், சமூக, கல்வி, பொருளாதார, அறிவியல், ஆன்மிகம் சார்ந்த தகவலை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இச்செய்திப் பிரிவை சமுதாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில் காலை 11:00 மணி உலகச் செய்தி அறிக்கைவழி, பத்து நிமிடங்களில் இந்த உலகையே நம் மனக்கண்முன் நிறுத்திவிடும் செய்திப் பிரிவினரின் கடப்பாடும் மின்னல் வேக துடிப்பும் எண்ணிடத்தக்கன. அதைப்போல பகல் ஒரு மணி செய்தியறிக்கை, மாலை ஐந்து மணி செய்தியறிக்கை, இரவு ஏழு மணி வர்த்தக செய்தியறிக்கை, இரவு ஒன்பது மணி செய்தியறிக்கை, பதினோரு மணி செய்தியறிக்கைகளின் மூலம் இந்திய சமுதாயத்தை தகவல் அறிந்த மக்களாக்கும் சீரியப் பணி, செம்மையானது.

இந்த செய்தி அறிக்கைகளின்வழி இயவர்கள், தமிழ்ப் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். மலேசியத் தமிழ்க் கல்வி முறைக்கு சுழியம் சொல்லை, அதுவும் விளையாட்டுச் செய்தி மூலம் அறிமுகம் செய்தனர். அதைப்போல, மாது என்பதற்குப் பதிலாக இல்லத்தரசி அல்லது பெண்; நபர் என்பதற்குப் பதிலாக அவர், இவர், ஆடவர் என்னும் சொற்கள், இரகசிய கேமரா என்பதை மாற்றி மறைகாணி என்னும் புதுமைச் சொல், டயர் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக வட்டகை, மனுபாரம் என்பதற்கு ஈடாக விண்ணப்பப் படிவம் என்னும் சொற்களை யெல்லாம் மலேசியத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பெருமை இவர்களைச் சாரும்.

இருந்தபோதும், இந்தச் செய்திப் பிரிவினரிடையே ஒருங்கிணைப்பு இல்லை; சிலர் மாறுபட்டு நிற்கின்றனர். அதனால், இன்னமும் சிலர் விண்ணப்ப பாரம் என்கின்றனர். விளையாட்டுப் போட்டியை போட்டி விளையாட்டு என்று சொல்கின்றனர். ‘Los Angeles’ என்னும் நகரத்தின் பெயரை ஒருவர் லாஸ் ஏஞ்சல்ஸ் என்று உச்சரிக்க, இன்னொருவர் லோஸ் ஏஞ்சலிஸ் என்று கூறும் நிலை தொடர்கிறது.

இதில் வேடிக்கை என்ன வென்றால், ‘Assistant Engineer, Ceiling Fan’ போன்ற ஆங்கில சொற்றொடர்களை அப்படியே ஒரு செய்தி ஆசிரியர் எழுத, அதையும் ஒரு வாசிப்பாளர் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல, சதி என்னும் சொல்லை பயன் படுத்தும்போதெல்லாம் நாசம் என்னும் சொல்லை தவறாமல் இணைத்துக் கொள்கின்றனர். அத்துடன், ஒன்றுபட்ட ஆதரவு அல்லது ஒருமித்த ஆதரவு என்பதற்குப் பதிலாக பிளவுபடாத ஆதரவு என்றே அனைவரும் தப்பாமல் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். ஆதரவு என்று வந்தவிட்ட பின் பிளவு என்னும் சொல் எதற்கு? இதற்குக் காரணம், ‘Undivided Support’ என்னும் ஆங்கில சொற்றொடரை சொல்லுக்கு சொல் என மொழி பெயர்ப்பு செய்வதுதான். இதில் தமிழிய மரபும் பாங்கும் சிதைந்து விடுவதை அவர்கள் அத்தனை பேரும் அறியாதிருகிக்கின்றனர்.

ஜூலை 13-ஆம் நாள் காலை ஒன்பது மணி செய்தி அறிக்கையில் ஐந்தாம் படிவம், ஆறாம் படிவம் என்னும் சொற்றொடரைப் பயன்படுத்திய மின்னல் செய்திப் பிரிவினரை எத்துணைப் பாராட்டினாலும் தகும். காலங்காலமாக, ‘படிவம் ஐந்து, படிவம் ஆறு’ என்றுதான் தவறாக உச்சரித்து வந்தனர்.

அத்துடன், ஜோ லோ என்பாரைப் பற்றிக் குறிப்பிட்டபோது, அவரை தனவந்தர் என்றனர். அவரை செல்வந்தர் என்பதுதான் சரியானது. தானிய வாணிகத்தின் மூலம் பொருட்செல்வம் படைத்தவர், பெரும் பண்ணையார், அல்லது வேளாண் தொழில் மூலம் பணம் படைத்தவரைத்தான் தனவந்தர் என்பது பொருத்தமாக இருக்கும்.

கணியனின் கூற்றை முதல் முதலில் முறியடித்த இளவரசரும் பல்கலை வித்தகரும் பெரும்பாவலருமான இளங்கோ அடிகள் படைத்த மக்கள் காவியமான சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலனை தனவந்தர் என்பது பொருந்தும்.