சங்கா சின்னையா | உலகச் சூழல் நாள் (We Don’t Deserve This Planet)
ஒவ்வோர் ஆண்டும் சூன் 5ஆம் நாள் உலகச் சூழல் நாள் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. பல நாள்களைக் கொண்டாடும் நாம் இச்சூழல் நாள் ஏன் கொண்டாடப்படுகிறது, ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதைச் சிந்திக்கவே இந்தக் கட்டுரை.
நமக்கும் சூழலுக்குமான உறவு என்ன என்பதை அறிந்து கொள்ளாமலேயே இன்று பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மிகச் சிலரே சூழலியலின் முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் உணர்ந்து இயற்கையை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.
பருவ நிலை மாற்றத்தை உணரும் முதல் தலைமுறை நாம் என்பது ஒரு பக்கம் இருக்க, இப்பருவ நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க ஏதாவது செய்யக்கூடிய இறுதித் தலைமுறையும் நாமே என்பதை உணர்ந்துள்ளோமா என்பது தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை இன்றைய நிலையில் இயற்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற, ஏற்படவிருக்கின்ற பேராபத்தையும் பேரழிவையும் பலர் உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.
இன்றைய தலைமுறை அடுத்த தலைமுறையின் வாழ்வியலை தன்னலத்துடன் அபகரித்துக் கொண்டு வாழ்கின்றது என்ற உண்மையைக் கூட இந்தத் தலைமுறை உணர்ந்துள்ளதா என்றால் அதுவும் கிடையாது. சிந்திக்க இயலா மாந்தனிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வித பேரழிவினைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியலாம்!
எதிர்காலமே இல்லாத உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீங்கள் தேவையில்லாமல் வீணே உழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை விரைவில் புரிந்து கொள்வீர்கள் என்று நானும் நம்பிக் கொண்டிருந்தேன். உலகெங்கிலும் கொரோனா நோய்த்தொற்று வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பின்னர் ஏதோ ஒரு சிறிய நம்பிக்கை துளிர்விட்டது. மாந்தரினம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது என்று பல சூழலியல் ஆர்வலர்கள் அகமகிழ்ந்தனர். ஆனால் நடந்ததோ வேறு!
மக்கள் மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் இயற்கையை நேசிக்கும் பண்பு துளி கூட ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
இயற்கைக்கும் நமக்கும் எந்தத் தொடர்புமே இல்லை என்பது போல்தான் இன்றும் செயல்பட்டு வருகின்றனர். வழக்கம் போலவே எப்பொழுதும் செயலாற்றும் சூழலியல் ஆர்வலர்களே தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வருவதை அறிய முடிந்தது.
நமக்கும் சூழலுக்குமான உறவுதான் என்ன?
இன்று எனக்குத் தேவையான உணவு, நீர், காற்று என அனைத்தும் கிடைத்துக் கொண்டுதானே இருக்கின்றது!; நான் ஏன் தேவையற்ற ஒன்றுக்காகப் போராட வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்; இந்த உலகம் தனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் இயங்கி வருகின்றனர்.
நமக்கு உணவு எங்கிருந்தோ வந்து கொண்டே இருக்கும்; நீர் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்; நாம் சுவாசிக்கும் காற்று எப்போதும் இருக்கும்; மழை வழக்கம் போலவே பெய்யும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
மேற்கண்ட மூன்று விடயங்களிலும் மறைந்திருக்கும் பல வினாக்களுக்கான விடைகள் யாருக்குமே தெரியாது; தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை.
நமக்கு உணவு எங்கிருந்து கிடைக்கின்றது?
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவையா?
தற்கால விவசாய முறைகள், விவசாய தொழில்நுட்பம் என்ன? அவை மாந்தரின நன்மையைக் கருத்தில் கொண்டுள்ளதா?
நாம் அருந்தும் நீர் நமக்குப் பாதுகாப்பானதா?
நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையானதா?
இவை போன்ற வினாக்களுக்கு உங்களிடம் விடை இருந்தால் நீங்கள் இயற்கையுடன் தொடர்புடையவர்கள் என ஒரளவு ஊகிக்க முடியும்.
எதுவுமே தெரியவில்லை என்றால் நீங்கள்தான் இயற்கைக்கு எதிரானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகவே செய்கின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் மட்டுமே தன்னலத்துடன் இயற்கையைத் தனது தேவைக்காக அழிக்கின்றான். அதன் எதிர்விளைவுதான் இன்று நாம் எதிர்நோக்கும் பல பேரழிவுகள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுவதற்கு நமக்குப் புதிய சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் வேண்டும்.
இன்றைய சூழலில் இச்சிக்கலுக்குத் தீர்வுதான் என்ன?
ஒன்று உலக மாந்தரினம் இதனை எதிர்கொள்ள வேண்டும்; இல்லையேல் மாசற்ற உலகினை உருவாக்கவாவது முயல வேண்டும்.
மாசற்ற உலகினை உருவாக்குவது என்பது இனி இயலாத ஒன்று என்பதை மறுக்கவியலாது:
ஆனால், இயற்கைப் பேரழிவை அறிவார்ந்த முறையில் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது, செயல்படுவது என்பது நம்மால் இயலும்.
இயற்கையைப் பராமரிக்க மனிதர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; ஆனால் அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அதைச் சொல்லித் தர வேண்டும்; அதுவே பயனளிக்கும்.
இந்த விடயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா என்ற வினா எழும். அதற்கான முயற்சிகள் குறைவுதான் என்பதைத் தெளிவாகவே கூறிவிடலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் இக்காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமே என்ற சிந்தனையுள்ளவர்கள் மிகச் சிலரே என்பதை மறுப்பதற்கில்லை.
இயற்கை அழிந்து கொண்டே வருகின்றது; சுற்றுச்சூழல் ஒவ்வொரு நாளும் பாதிப்படைந்து கொண்டே வருகின்றது; இதனால் பாதிக்கப்பட போவது யார்?
நாமும் நமது அடுத்த தலைமுறையினரும்தான் குறிப்பாக தங்கள் குழந்தைகள்தாம் என்பதைப் பலர் உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை உலகின் உயிர்கள் அனைத்தும் நீடித்தும் நிலைத்தும் தளர்வற்றும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதகுல வளர்ச்சி என்ற பெயரில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடங்கி பேராசை கொண்ட அனைத்து மனிதர்களும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்தி வருகின்றனர்.
இதன் பாதிப்புகள் சிறிது சிறிதாக நம்மைப் பாதித்து வருகின்றது. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படல பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் இடர்களை விளைவிக்கின்றன.
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே சுற்றுச்சூழலைக் கெடுத்துக்கொண்டு இருப்பவன் மனிதன் மட்டுமே!
இயற்கையைப் பாதுகாக்க சூழலியல் அறிவியலாளர்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இயற்கை ஆர்வலர்களும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்; ஆனால் இவர்கள் மிகச் சிலரே!
நமது அடுத்த தலைமுறைக்குச் சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இதில் நமது பங்கு என்ன?
தமிழர்களைப்போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை; தமிழர்களைப்போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை; இதை இங்கு அழுத்தமாகவே பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனி மனிதனும் சுற்றுச்சூழலைப் பேணிக்காப்பது தனது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும் இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும் நாளைய உலகில் நமது அடுத்த தலைமுறையினர் சிறப்பாக வாழவும் இயலும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சூழல் தான் உள்ளது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இன்றளவும் கனவாகத்தான் உள்ளது என்று உறுதியாகக் கூற முடியும்.
அது நனவாக வேண்டுமாயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்; இதனை நடைமுறைப்படுத்தும் கல்வியும் தேவை; வருங்காலத் தலைமுறைக்குக் கல்வியின் வழிச் சுற்றுச்சூழலைப் பேண வழி காட்டுவதே நமது இப்போதைய கடமையாகும்.
– சங்கா சின்னையா, பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்