தேன்

தேன் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. மணிவாசகப் பெருமான் தேனே, அமுதே என்று திருவாசகத்தில் பாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனைத் தேன் என்று புகழ்கிறார்.

திருமாளிகைத் தேவர் தமது பாடலில் சித்தத்துள் தித்திக்கும் தேனே’’ என்று புகழ்கிறார்.

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே நினைத்தொறும், கான்தொறும், பேசும் போதும் ஆனந்தத் தேன் சொரிபவர் ஈஸ்வரன். மழைகூட ஒருநாளில் தேனாகலாம் என்று இக்காலக் கவிஞர் ஒருவர் பாடியுள்ளார்.

மாணிக்கவாசகர் தான் பாடிய பால் நினைத்தூட்டும் தாயினும் சால என்ற பாடலில் ‘’தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே’’ என்கிறார். யானே பொய் என் நெஞ்சம் பொய் என்ற பாடலில் தேனே அமுதே கரும்பின் தெளிவே’’ என்கிறார். இங்ஙனம் எல்லா அடியார்களும் இறைவன் எழுந்தருளி உள்ள இடம், தேனாய் இன்னமுதாய் உள்ள தெனப் பாடுகிறார்கள்.

இதோ இன்னொரு பாடலில் ‘’கண்ணகத்தே நின்று களிதருதேனே கடலமுதே கரும்பே’’ என்கிறார். இது திருப்பள்ளி எழுச்சியில் இடம்பெற்றுள்ளது.

தேன் என்பதற்கு இனிமை மட்டுமல்ல இன்னும் பலவிதமான அர்த்தங்கள் உண்டு. அவற்றுள் மது, கள், வாசனை என்பன சில.

இறைவனுக்குரிய அபிசேஷக திரவியங்களுள் தேனும் ஒன்றாக சேர்க்கப்படுகிறது. சின்னக் குழந்தைகள் பேச முடியாமல் இருந்தால் தேனை எடுத்து அவர்களின் நாவில் பூசுவார்கள். அத்துடன் குழந்தைகள் பேசத் தொடங்கிவிடுவார்கள்.

இங்கேயும் தேனைப்பற்றிய ஒரு பாடல் வருகிறது. படித்துப் பாருங்கள்!

“நானேயோ தவம் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன்

தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்

தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான்

ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே’.

நாம் முன்செய்த நல்வினையால் இப்பிறவியில் திருவைந்தெழுத்தை மறந்துவிடாமல் ஓதி, இறைவனை வழுத்துகிறோம்.

இனிமையான தேனையும் இறைவனுக்கு அர்ப்பணித்து இறை அருளோடு எல்லோரும் சிறப்பாக வாழ்வோமாக.

வணக்கம்!! – சிவத்தமிழ்செல்வி, அன்னலட்சுமி சுப்பிரமணியம்.