என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம் – கஸ்தூரி

‘ஞாயிறு’ நக்கீரன், “அரசியல் பள்ளியில் என் தந்தை எனக்கு வகுப்பாசிரியர்; லிம் கிட் சியாங், தலைமை ஆசிரியர். என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம்; நான் சுவாசிக்கும் காற்று அரசியல் காற்று; என் மனம் முழுக்க அரசியல் சிந்தனை. எனவே, என் தந்தை வகுத்துத் தந்த பாதையில் என் அரசியல் பேராசான் லிம் கிட் சியாங் வழிகாட்டுதலில் என் அரசியல் பயணமும் வாழ்க்கையும் தொடர்கிறது. இதில், இல்லறம் பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட நேரமேது” என்னும் கஸ்தூரி, ஜூலை 12-ஆம் நாள் தன் தந்தை பட்டுவைப் பற்றி கீழ்கண்டவாறு நினைவு கூர்கிறார்.. ..

மஇகா-விறுகு அடுத்து, மலேசியவாழ் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகமாக உறுப்பியம் பெற்றுள்ள கட்சி ஜனநாயக செயல் கட்சி(ஜசெக). மலையகத்திற்கு சுதந்திரம் கிடைத்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கப்பட்ட ஜசெக, அடுத்த நான்கு  ஆண்டுகளிலேயே மிகப்பெரிய ஜனநாயக வெற்றியை எட்டியது.

1969-இல் நடைப்பெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் அக்கட்சிக்கு பதின்மூன்று இடங்களை அள்ளித் தந்தனர். தேர்தல் களம் கண்ட முதலாவது தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்ற ஜசெக, ஊக்கமும் அதன்வழி ஆக்கமும் பெற்றுத் திகழ்ந்தது.

சமதரும மக்களாட்சி, ஜனநாயக சமுதாயம், சமூக நீதி – ஆகிய முக்கொள்கைகளையும் இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் சின்னமான செவ்வண்ண ஏவுகணை, ‘புதுமை-பொலிவு-முற்போக்கு’ என்னும் முச்சிந்தனையை உள்ளடக்கியுள்ளது. ஏவுகணையின் அடிப்பகுதியில் உந்து ஆற்றலாக குறிப்பிடப்படும் நான்கு அடையாளங்களும் கட்சிக்கு ஆதாரமாக விளங்குகின்ற மலாயர்கள், சீனர்கள், இந்தியர்களுடன் மற்ற இனத்தவரையும் குறிப்பிடுகின்றன.

இப்படிப்பட்ட ஜசெக என்னும் அரசியல் பேரியக்கத்தில் பட்டு வண்ணத்தைப் போன்று பளிச்சென தன் உள்ளத்தை வெளிப்படுத்தும் பாங்கைக் கொண்டிருந்த தந்தை பி.பட்டுவும், தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். தேக்கு மரம் தேக்கி வைத்திருக்கும் உறுதியைவிட மனவுறுதி படைத்த அவர், தன் உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்காக ஈகம் செய்தார்.

ஜசெக-வில் இணைந்த குறுகிய காலத்திலேயே கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் ஆனார் என் தந்தை. அவர் ஆற்றிய சேவை, அப்படி!

ஜசெக-வின் மாத ஆங்கில இதழான ‘ரோக்கெட்’டின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். 1978-இல் லிம் கிட் சியாங்குடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். மீண்டும் 1987-இல் ‘ஓப்ராசி லாலாங்’ என்ற நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டு கெமுந்திங் தடுப்பு முகாமில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

இடையில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு கோப்பெங் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982-இல் மெங்கெளும்பு(பேராக்) தொகுதியிலிருந்தும் 1986-இல் பாகான்(பினாங்கு) தொகுதியிலிருந்தும் நாடாளுமனறத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1990-இல் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் துன் ச.சாமிவேலுவை எதிர்த்து களம் கண்ட தந்தை பட்டு அவர்களை விட்டு, வெற்றிக் கோடு சற்று தள்ளி நின்றது. தேர்தலில் வெற்றி கிடைத்தாலும் தோல்வி அடைய நேர்ந்தாலும் இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு கட்சி-இயக்கம் என்றே சுழன்று வந்தார்.

கடுமையான சிறைவாசத்தை எதிர்கொள்ள நேர்ந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், 1995 ஜூலை 12-இல் தன் வாழ்க்கைப் பயணம்-அரசியல் பயணம் இரண்டையும் ஒருசேர நிறுத்திக் கொண்டார் என்றெல்லாம் தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்ந்த கஸ்தூரி, தான் நாடாளுமன்ற பொறுப்பு வகுக்கும் இந்த நேரத்தில் அவர் இல்லாத நிலை என் மனதை அழுத்துகிறது என்றார்.

“இருந்தாலும், அவரின் வழிகாட்டுதலை மனதில் சுமந்து என் அரசியல் பயணத்தைத் தொடர்கிறேன்” என்று தன் நினைவலைகளை நிறைவு செய்தார் கஸ்தூரி.