– கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 28, 2018.
ஜனநாயகத்தில் நீதித்துறை மிகவும் சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதன் தனித்தன்மையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதன் நீதிபரிபாலனத்தில் தலையிட எவர்க்கும் அதிகாரம் இல்லை, உரிமையும் இல்லை. இது நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதோடு நீதிபதியின் நீதிபரிபாலன சுதந்திரத்தை நிலைப்டுத்துகிறது. நீதிபதி ஒரு வழக்கை விசாரித்து அவரின் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு தீர்ப்பு வழங்கவேண்டும். அதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது. நியாயமான அரசு இந்தத் தூய்மையான மரபை புறக்கணிக்காது. புறக்கணித்தால் அந்த அரசு அநீதியான முறையில் நடந்து கொள்கிறது எனலாம்.
நீதிமன்றம் சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்பட நீதிபதிகள் தேவை. நீதிபதிகளை நியமிக்கும் முறையை அரசமைப்புச் சட்டம் விளக்குகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதி பதவி ஏற்கும்போது எடுக்கும் ஆணைமொழி என்ன என்பதை கவனிக்க வேண்டும். தமது ஆணைமொழியில், “நான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பேன்” என்று தெளிவாக கூறுவார். எனவே, இதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது ஒரு நீதிபதி நீதி வழங்கும்போது தன்முன்னே இருக்கும் வழக்கின் பொருண்மைகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எல்லா சட்ட நுணுக்கங்களையும் நீதிபதி ஆய்ந்து பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சான்றினை மதிப்பீடு செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
நீதிபதி வழங்கும் தீர்ப்பில் குறை இருக்குமானால் அதைத் திருத்தும் பொறுப்பு மேல்முறையீடு நீதிமன்றங்களுக்கு உண்டு. உச்சநீதிமன்றம் அதில் தலையிடாவிட்டால் அது தீர்ப்பின் நியாயத்தை உறுதிப்படுத்தலாம். அல்லது கீழ் நீதிமன்றத்தில் தவறான தீர்ப்பை தவறாகப் புரிந்துகொண்டு நிகழ்ந்தத் தவறை திருத்தாமல் விட்டுவிடலாம். இவை யாவும் நடக்கக்கூடியவை. ஆனால், ஒரு தீர்ப்பு நியாயமற்றது என்று புலப்பட்டால் உச்சநீதிமன்றம் அதைத் திருத்துவதற்கு வழிகாணலாம். ஒரு தீர்ப்பு நிச்சயமாக அநீதிக்கு வழிவிடுகிறது, அதைத் திருத்துவதற்கு உயர்நீதிமன்றம் தயங்குகிறது அல்லது சட்டத்தில் காணப்படும் சிக்கலைத் தீர்க்க தடுமாறுகிறது என்றால் நாடாளுமன்றம் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவரலாம். ஒருவகையில் இது நீதிமன்றத்தின் அதிகாரத்தில் நாடாளுமன்றம் தலையிடுவதாகக் கருதப்பட்டாலும் மக்கள் நலனில் நீதித்துறை வழுவிவிட்டதைத் திருத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ளலாம். நீதித்துறை சட்டத்தை சரிவர புரிந்துக்கொள்ளாமல் செயல்பட்டால் நாடாளுமன்றம் தலையிட சுதந்திரம் உண்டு.
குழந்தைகள் தொடர்பாக ஆசிரியர் இந்திரா காந்தி தன் கணவரோடு நடத்திய வழக்கு ஓர் உதாரணம். அந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் போனபோது மூன்று மேல்முறையீட்டு நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இருவர் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்றனர். மூன்றாவது மேல்முறையீட்டு நீதிபதி ஹமீது சுல்தான் அபுபக்கர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்தார். இப்படிப்பட்ட தீர்ப்புகள் வருவது ஒன்றும் விசித்திரம் அல்ல, புதினமும் அல்ல. இறுதியில் இந்த வழக்கு கூட்டரசு நீதிமன்றத்திற்கு போனபோது இந்திரா காந்திக்கு நியாயம் கிடைத்தது. ஹமீது சுல்தானின் இணங்காமை தீர்ப்பின் கருத்தாழமிக்கக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதோ இல்லையோ, இந்திரா காந்திக்கு நியாயம் கிடைத்தது.
ஆனால், சமீபத்தில் நீதிபதி ஹமீது சுல்தான் அபுபக்கர் இந்த இந்திராகாந்தி வழக்கில் தாம் வழங்கியத் தீர்ப்பைப் பற்றி கடுமையாக விமர்சித்தது மட்டுமல்ல, தம்மை கடுமையான சொற்களால், நாகரிகமற்ற முறையில் திட்டினாராம் ஓர் உயர்நிலை நீதிபதி. அந்த உயர்நிலை நீதிபதியின் பெயரை குறிப்பிடவில்லை ஹமீது சுல்தான். சட்டத்தில் கவனம் உள்ளவர்கள் ஹமீது சுல்தானின் தீர்ப்பில் நியாயம் இருக்கிறது, சட்டத்தின் நுணுக்கங்களை நன்கு அலசிப்பார்த்து வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒப்புக்கொள்வார்கள்.
அரசமைப்புச் சட்டத்தில் கவனம் கொண்டவர்கள், அதன் மகிமையை உணர்ந்தவர்கள் ஹமீது சுல்தானின் தீர்ப்பை ஆதரிப்பார்கள். இதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. அரசமைப்புச் சட்டத்தை வியாக்கியானம் செய்யும்போது அந்த விதிகள் இயற்றப்பட்டபோது இருந்தச் சூழ்நிலையை இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிடும்போது கவனம் தேவைப்படும். அரசமைப்புச் சட்டத்தை நினைத்த மாத்திரத்தில் திருத்தம் செய்வதை விடுத்து; முறையான வியாக்கியான மரபுகளைப் பேணி காலத்துக்கேற்ற தீர்ப்புகளை வழங்கும் பொறுப்பு நீதிபதிகளுக்கு உண்டு. இவ்வாறு நடந்துகொள்வதில் தவறு இல்லை. அதே சமயத்தில் செய்யப்பட்ட வியாக்கியானம் தவறு என்றால் மேல்முறையீட்டு நீதிமன்றம் திருத்தும் நடவடிக்கையில் இறங்கலாம்.
ஹமீது சுல்தான் விவகாரத்தில் மேல்நிலை நீதிபதி நடந்துகொண்டமுறை நியாயமானதா என்ற கேள்வி எழும்புகிறது. சட்டவிதிகளுக்கு உடபட்டு நடந்து கொள்ளாமல் ஒரு நீதிபதியைத் திட்டுவது, அவரை ஓரங்கட்டுவது வன்ம எண்ணத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவ்வாறு நடந்துகொள்வதானது அந்த உயர்நிலை நீதிபதியின் மனப்போக்குக்கு எதிராகச் செயல்பட்டால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறது. இது ஒரு புறம் இருக்க, அந்த உயர்நிலை நீதிபதியின் மனம்கோணாது நடந்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் நிலவியது போல் தோன்றுகிறது. இத்தகைய உயர்நிலை நீதிபதியின் நடத்தை அவருக்குக் கீழ் பணிபுரியும் நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்படமுடியாது என்ற சந்தேகம் எழுகிறது. ஹமீது சுல்தானை கடிந்த உயர்நிலை நீதிபதியின் மனதிற்கேற்ப இந்திராகாந்திக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியவர்களின் நாணயமும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது
ஹமீது சுல்தானைக் கடிந்த அந்த உயர்நிலை நீதிபதி யார் என்று முன்னாள் உச்சநீதிமன்ற டத்தோ ஸ்ரீ கோபால் ஸ்ரீராம் வினவியுள்ளார். ஹமீது சுல்தான் தமது அடக்கமான பண்பினை வெளிப்படுத்தியதை மெச்சவேண்டும். ஸ்ரீராமின் கேள்வி நியாயமானதாகும். அதுவேறு அரங்கில் எழுப்பப்படவேண்டிய கேள்வி.
இந்திரா காந்தி வழக்கு நடந்து முடிந்து பல வருடங்களாகிவிட்டன. இப்பொழுதுதான் ஹமீது சுல்தான் தமக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்தினார். இவ்வளவு காலம் அமைதி காத்தது நியாயமா? இந்தக் குற்றச்சாட்டை அம்பலத்திற்குக் கொண்டுவரலாமா?, என்ற கேள்விகள் எழலாம். அவற்றிலும் நியாயம் இருக்கிறது.. ஆனால், இவ்வாறு முறைகேடாக நடந்து கொள்ளும் உயர்நிலை நீதிபதிகள் செய்யும் தவறுகளைக் குறித்து புகார் செய்ய எந்த வசதியும் இல்லாதபோது அவர்கள் புரியும் தவறுகளை அம்பலத்திற்குக் கொண்டுவருவது சிரமம்தான். எனவே, வழக்கறிஞர் கழகம் ஹமீது சுல்தான் அபுபக்கர் வெளியிட்ட புகார் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கும்படி கோரிக்கை முன்வைத்துள்ளது. அந்த விசாரணை ஆணையம் நீதிபதிகளின் நியாயமான புகார்களை விசாரிக்க ஓர் அமைப்பு தேவை. அதை அமைத்தால் நல்லது. பாதிப்புற்ற நீதிபதிகள் ஹமீது சுல்தானைப்போல் வெகுகாலம் காத்திருக்கவேண்டியது இல்லை.