மன்மத ரதிமாயை

 

விஷ்ணுதாசன்

கண்மலரம்பு தொடுப்பாள் – அந்த
கன்னி காதல்கனி கொய்வாள்!
காரிருள் கூந்தல் ஒளிந்து தன்
பொன்னொளிர் முகம்காட்டி
மாரன் மனையாள் பாடம்சொல்வாள்

வேதம் கற்றவர் நாழிகையில் மறப்பார்
வேதவிழி இமைக்கையில் இதயம் துடிப்பார்
காதவழிப்போவோரும் கனவில் மிதப்பார்
கவிதைவேண்டி கவிஞர் நாடி நிற்பார்
காதல்கலை சுகமென சொல்வார்

வான்மழை பொய்த்தாலும் வளமைகுன்றாது
வாடியிளைத்தாலும் இளமை குறையாது
வசந்தகால பொன்மேனிதொட்டு
வருடிடும் சுகம் தமிழ் தென்றல்
வாரி அணைத்து முத்தம் கோடி

காலரதமேறி ரதி என்னும்
கோலமகள் மகரந்தம் தூவிட
காதல்மயக்கம் உயிர்களுக்கு தெளியாது
கருக்கொண்டு உறவுதந்து வளர்த்திடுவாள்
கவலைதந்து அதைதீர்த்து சுழல்கிறாள்!