அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை – கி.சீலதாஸ்

மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி அரசமைப்புச் சட்டச் சிக்கல்களைக் கிளப்புவதில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது நாடாளுமன்றமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோவிட்-19 காரணமாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கும்.

அதன் கடுமையும், கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிப்புற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மக்கள் அச்சத்துடன் இயங்குகின்றனர், இருக்கின்றனர். நிம்மதியாக வாழ முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் பலவிதமான பிரச்சினைகளை எழுப்புவதில் கவனம் மிகுந்து காணப்படுகிறது.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டலாம் என்று மாமன்னர் அறிவித்தபோதிலும் அதில் உற்சாகம் குறைந்த நிலையைத்தான் காண முடிந்தது. அதுமட்டுமல்ல, யார் நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் பெற்றிருக்கிறார் – மாமன்னரா? அல்லது அரசா? என்ற சர்ச்சையும் எழுந்தது. அது ஒரு வகையாக தீர்வு கண்டு, நாடாளுமன்றம் ஜூலை இருபத்தாறாம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

26ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற அமர்வு பிரதமரும் மற்ற அமைச்சர்களின் பொருளாதாரச் சீரமைப்பு விளக்கமளிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர்கள் மட்டும் விளக்கமளிப்பார்கள்; கேள்விகளுக்கு இடமில்லை என்றும் சொல்லப்பட்டது. இது ஒரு விசித்திரமான நாடாளுமன்ற அணுகுமுறை. ஒரு வகையில் ஜனநாயகத்திற்கும், விவாத முறைகளுக்கும் மதிப்பளிக்காத அரசியல் கலாச்சாரத்தை, கொள்கையைக் கொண்ட நாடுகளில் இவ்வாறு நிகழ வாய்ப்பு உண்டு! ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாடு நாட்டில் இத்தகைய அணுகுமுறை விநோதமானதே.

நாடாளுமன்ற தொடர்வில் உரையாற்றிய பிரதமர் துறையிலுள்ள சட்ட அமைச்சர் டத்தோ ஶ்ரீ தக்கியுடீன் ஹசான், அரசு நெருக்கடி நிலையை நீட்டிக்கும்படி மாமன்னரிடம் பரிந்துரைக்கவில்லை. நெருக்கடி நிலை காலத்தில் இயற்றப்பட்ட அவசர சட்டங்களை அரசு ரத்து செய்கிறது என அறிவித்தார்.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் 26ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியபோது மாமன்னரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர சட்டங்களும் நாடாளுமன்ற மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது. இது எதைக் குறிக்கிறது? அவசரகாலச் சட்டங்கள் ரத்துக்கு உரியவை. எனவே, நாடாளுமன்றம் அவற்றின் மீது விவாதிக்கலாம் என்ற கருத்து பரவலாகவே இருந்திருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கருத்தில் விளக்கம் கோரினர். கேள்விக்கான விளக்கம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையில் பலவிதமான கருத்துகள் பரவுவதற்குக் காரணியாக அமைந்தன மாமன்னரின் 29.07.2021 தந்த விளக்கமும், பிரதமர் டான் ஶ்ரீ முகைதின் யாசினின் பதிலும். மாமன்னர் தமது கடிதத்தில் தம்மிடம் தரப்பட்ட அவசரகாலச் சட்ட ரத்து பற்றி தாம் ஒப்புதல் வழங்கவில்லை எனவும், கையொப்பமிடவில்லை என்றதோடு அவசரகாலச் சட்டங்களை நாடாளுமன்ற விவாதத்திற்கு விட்டுவிட வேண்டும் என்று தாம் சொன்னதாக விளக்கினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், மாமன்னரிடம் ஒப்புதல் பெறுவதைப் பற்றி எதையும் சொல்லாமல் அரசமைப்புச் சட்டத்திற்கிணங்க அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இந்தப் பிரச்சினையைக் குறித்து பலர் பலவிதமான கருத்துகளை வெளியிட்டனர், வெளியிடுகின்றனர். இவர்களில் சட்டவியல் அறிஞரான டத்தோ ஶ்ரீ கோபால் ஶ்ரீ ராம், தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அமைச்சரவையின் முடிவுகளுக்கு மாமன்னரின் கையொப்பம் தேவையில்லை என்பது அவரின் கருத்து. தமது கருத்துக்குத் துணையாக 1963ஆம் ஆண்டு கிளந்தான் அரசு மலாயா கூட்டரசு மற்றும் அன்றைய கூட்டரசு பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மீது தொடுத்த வழக்கைக் குறிப்பிட்டார்.

இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை நெருக்கடி கால சட்டத்தை ரத்து செய்வதைக் குறித்ததாகும். கிளந்தான் அரசு தொடுத்த வழக்கு மலேசியா அமைவதைக் குறித்து அந்த மாநிலம் கொண்டிருந்த எதிர்ப்பைக் குறித்ததாகும். கிளந்தான் அரசு குற்றச்சாட்டின் சாரம் என்னவெனில்,

(1)    மலேசியா ஒப்பந்தம் 1957ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மலாயா ஒப்பந்தத்திற்கு முரணானது;

(2)    மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் உருவாக்கப்பட்ட மலேசியா ஒப்பந்தம் ஏற்புடையது அல்ல;

(3)    கிளந்தான் ஆட்சியாளர் மற்றும் ஏனைய மாநில ஆட்சியாளர்களை மலேசியா ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளாதது முறையல்ல என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி தோம்ஸன் வழக்கைத் தள்ளுபடி செய்தவர், அதற்கான காரணங்களையும் விளக்கினார். முக்கியமாக அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின்படி புது பிரதேசங்களைப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளும் அதிகாரத்தைக் கூட்டரசு அரசு பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

அந்த 1963ஆம் ஆண்டு வழக்கு இன்றைய சர்ச்சைக்கு உதவாது. இன்று ஏற்பட்டிருக்கும் சர்ச்சையானது அமைச்சரவை அவசரகாலச் சட்டங்களை ரத்து செய்யும் முன் மாமன்னரிடம் அனுமதி பெற்றதா என்பதே! இதற்கு விளக்கமளிக்கும் சிலர் மாமன்னரின் ஒப்புதல் தேவையில்லை என்று வாதிடுகின்றனர்.

மற்றொரு பக்கம் மாமன்னர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் அவசரகாலச் சட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு விடை நல்கும் வகையில் அமைந்திருக்கிறது ஒரு சிலரின் கருத்து. ஜனநாயகம் சிறப்புடன் இயங்க வேண்டுமாயின் கருத்துப் பரிமாற்றம் தேவை. அதைத் தடுக்கும் எந்தச் செயலும் மக்கள் விரோதச் செயல் என்றால் தகும். இவ்வாறு பலவிதமான கருத்துகளை, அதாவது மாமன்னரின் ஒப்புதல் தேவையில்லை என்போர் நெருக்கடி கால சட்டத்தை, அவசரகால சட்டத்தை மாமன்னர் பிரகடனப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ரத்து செய்யும் அதிகாரத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதால் அரசு மட்டும்தான் ரத்து செய்யலாம் என்கின்றனர். இது நியாயமான அல்லது சட்டத்துக்கு உட்பட்ட வியாக்கியானமாகக் கருத முடியாது; ஏனெனில் அரசுதான் ரத்து செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்று அரசமைப்புச் சட்டம் சொல்லாததையும் கவனிக்க வேண்டும். இதன்படி பார்க்கும்போது நெருக்கடி கால பிரகடனத்தை அரசு செய்ய இயலாது. ஆனால், அரசின் ஆலோசனைப்படிதான் மாமன்னர் பிரகடனப்படுத்துகிறார்.

அதுபோலவே, அவசரகாலச் சட்டங்களை ரத்து செய்வதற்கான காரணங்கள் இருப்பின் மாமன்னருக்கு ஆலோசனை கூறி அவரின் ஒப்புதலோடு ரத்து செய்யலாம். இதுதான் முறை. 1979ஆம் ஆண்டில் தே செங் போவுக்கும் அரசுக்கும் நடந்த குற்றவியல் வழக்கில் இங்கிலாந்தின் பிரிவி கவுன்சில் (கோமறை மன்றம்) வழங்கிய தீர்ப்பில் நெருக்கடி காலச் சட்டங்களை இயற்றிய மாமன்னரிடம்தான் அவற்றை ரத்து செய்யும் அதிகாரமும் குடிகொண்டிருக்கிறது என்று கூறியது. இங்கிலாந்தில் இயங்கிய கோமறை மன்றத்திற்கு மேல்முறையீடு செய்யும் உரிமையை மலேசிய அரசு 1985ஆம் ஆண்டு ரத்து செய்தது.

எனவே, நாடாளுமன்றம் கூடுவது நிச்சயமாகிவிட்ட நிலையில் அதுவே அவசரகாலச் சட்டங்களைப் பற்றி முடிவெடுக்கலாம் என்ற மாமன்னரின் கருத்து அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது எனும்போது மாமன்னருக்கே உரிய அதிகாரத்தை அரசு பயன்படுத்தினால் அது முறைகேடான செயல் என்றே கருதப்படும்.

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அவசரகாலச் சட்டங்கள் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்ற நிலை நீடிக்கிறது. இது தேவையற்ற நிலை. இதற்கான பொறுப்பை அரசு சுமக்க நேரிடும். இந்தக் கட்டுரை அச்சுக்கு அனுப்பிய பிறகு நடுவண் அரசு அவசரகாலச் சட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இது மாமன்னரின் முடிவே சரியானது, அரசமைப்புச் சட்டத்தை ஒட்டி அமைந்திருக்கிறது எனின் தவறாகாது.