ஐ.பி.சி.எம்.சி. என்பது இலவு காத்த கிளிதானா?

இராகவன் கருப்பையா –காவல்துறையினர் புரியும் அராஜகங்களை விசாரணை செய்வதற்கு ஐ.பி.சி.எம்.சி. எனப்படும் விசாரணை ஆணையம் அமைக்கப் பரிந்துரைகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன.

ஆனால் இவ்விவகாரம் இன்னமும் ‘இலவு காத்த கிளியைப் போல’ உள்ளது நம் அனைவருக்குமே ஏமாற்றமளிக்கும் விசயமாகும்.

இந்த அக்கரையின்மைக்கு யார் காரணம் என்று தெளிவாகக் குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்குப் பல தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

கடந்த காலங்களில் ஒரு சில காவல் துறைத் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இதர சிலர் சிற்சில மாற்றங்களுடன் அந்த ஆணைய அமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருந்தனர்.

இருந்த போதிலும் அந்த ஆணையத்தைச் சட்டமாக்கி அதனை அமலாக்க நிலைக்குக் கொண்டு வருவது அரசியல்வாதிகளின் கையில்தான் உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே.

எனவே இந்த விவகாரத்தை மட்டும் நமது அரசியல்வாதிகள் ஏன் வளவளவென இழுத்துக் கொண்டு ஏனோதானோ எனும் போக்கில் தாமதப்படுத்துகின்றனர் என்று தெரியவில்லை.

மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிரான சட்டத்திருத்தங்களுக்குக் கூட அதி முக்கியத்துவம் கொடுத்துக் கடந்த ஆண்டில் மிக விரைவில் நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

ஆனால் ஐ.பி.சி.எம்.சி. அமைப்பதில் மட்டும் ஏன் இந்த மெத்தனப் போக்கு எனும் கேள்வி, குறிப்பாக இந்தியச் சமூகத்தினரை வருடிக்கொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி கோம்பாக் மாவட்ட காவல் நிலைய தடுப்புக் காவல் கைதி கணபதி தொடங்கி கிளேங் காவல் நிலையக் கைதி ஓமார் எனும் ஹேமநாதன் வரையில் 5 வாரங்களில் நிகழ்ந்த 4 மரணங்கள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து 4 மரணங்கள் என்பது என்றும் இல்லாத அளவுக்குப் பேரதிர்ச்சிதான் – பொது மக்களைப் பொருத்த வரையில்!

ஆனால் அரசுத் தரப்பில் இந்த சம்பவங்கள் அவ்வளவாக யாரையும் அசைத்ததாகத் தெரியவில்லை.

வழக்கம் போல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் கூக்குரல்கள்தான் – அதுவும் ஒரு சில தினங்களுக்கு மட்டுமே.

‘விருந்தும் மருந்தும் மூன்றே நாள்களுக்குத்தான்’ என்பதை போல இவர்களுடைய கூச்சலும் கும்மாளமும் ஓரிரு நாள்களுக்குத் தினசரி பத்திரிகைகளில் வெளியாவதோடு முடிந்துவிடுகிறது.ஒவ்வொரு முறையும் கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ களமிறங்கி கண்டனங்களைப் பதிவு செய்கிறார்.

எப்போது ஓயும் இந்த மரண ஓலங்கள்! இன்னும் எத்தனை காலங்களுக்கு காவல்துறையினரின் அடாவடித்தனத்தை நாம் பொருத்துக் கொள்வது என முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரன் இம்முறை குரல் கொடுத்தார்.

அரச விசாரணை ஆணையம் நிறுவுவதே சரியான முடிவு என வழக்கம் போல பினேங் மாநில துணை முதல்வர் கருத்துரைத்தார்.

தடுப்புக்காவல் மரணங்கள் தொடர்கதைதானா? போதும் போதும் என்கிற அளவுக்கு தடுப்புக்காவலில் நிகழும் மரணங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என்று ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் கூறினார்.

அதோடு சரி, அவ்வளவுதான் இவர்களுடைய வேலை – இது போன்ற அடுத்த மரணம் ஏற்படும் வரை. அதுவரையில் எல்லாருமே இதர வேலைகளை கவனிக்கக் கிளம்பிவிடுவார்கள் – ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நிலைப்பாட்டில்.

மரணமடைந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய வசதிக்கேற்ப சொந்தமாக வழக்கறிஞர்களை அமர்த்தி அரசாங்கத்திற்கெதிராக வழக்கை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

மற்றவர்களுடைய நிலைமை எல்லாம் பரிதாபமாகவே உள்ளது. இதுதான் உண்மை என காவல்துறையினர் கொடுக்கும் விளக்கங்களுக்கு எதிராகப் போராடச் சக்தியில்லாமல் வேண்டா வெறுப்பாக அவற்றை ஏற்றுக்கொண்டு நடையைக்கட்டுகின்றனர்.

தங்களுடைய அரசியல் ஏற்றத்திற்கு இத்தகைய சம்பவங்களை ஒரு பகடைக்காயாக இந்த அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்று கூட சில சமயங்களில் நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

தனிப்பட்ட முறையில் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் ஒரு சிறப்புக் குழு அமைத்து பிரதமரை சந்தித்து இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர்களுக்கு இன்னமும் நேரமில்லை.

அதுவரையில் ஐ.பி.சி.எம்.சி. எனும் விசாரணை ஆணையம்  நம்மை பொறுத்தவரையில் ‘இலவு காத்த கிளி’யாகவேதான் இருக்கும்!