இலக்கியம் சாடும் பாசியின் மறுபக்கம், அல்கா அபரிதமானது – கவிதா கருணாநிதி

இலக்கியங்கள் பாசி என்ற சொல்லை ஒரு குறைபாடாகவே காட்டியுள்ளன. உதாரணமாக, “…நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்..” என்கிறார் பாரதியார். “ ….கலங்கும் பாசி நீர் அலை கலாவ, ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து..” என்கிறது நற்றிணை.

இந்தப் பாசியின் மறுபக்கம்தான் என்ன, அறிவியல் பார்வையில் ஒரு சின்ன விளக்கம்.

பாசியை ஆங்கிலத்தில் அல்கா என்பார்கள். அல்கா எனப்படுவது ஒருவகை நீர்வாழ் தாவரமாகும். இத்தாவரம் மைக்ரோ அல்கா(Micro algae) மற்றும் மேக்ரோ அல்கா(Macro algae) என்று இருவகை படும். சீவீட் (seaweed) என்றழைக்கப்படும் கடற்பாசி மேக்ரோ அல்காவைச் சார்ந்த வகையாகும். சைனோ பெக்டிரியா (cyanobacteria) என்றழைக்கப்படும் நுண்ணுயிரியல் மைக்ரோ வகையைச் சாரும்.

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி எரிமலைபோல் வெப்பமும் இரசாயனக் கலவைகளும் சேர்ந்த இடமாய் மட்டுமே இருந்தது. தாவரங்களும் விலங்குகளும்கூட இல்லாத பூமியைச்  சைனோ பெக்டிரியா அதாவது பச்சையும் நீலமுமாய் இருக்கும் மைக்ரோ அல்காதான் உருமாற்றி அமைத்தது.

சைனோ பெக்டிரியா பிராணவாயுவைச் சுவாசிக்க ஆரம்பித்த பிறகுதான் பூமி மனிதன் வாழக்கூடிய இடமாய் மாறியது.

மேக்ரோ அல்கா வகையைச் சார்ந்த கடற்பாசி நீர்வாழ் தாவரமாக இருந்தாலும் நிலத் தாவரம் போல் ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்க முடியும். இத்தாவரங்கள் கடலில் இருக்கும் கரியமிளவாயுவை ஒளிச்செயற்கைக்கு பயன்படுத்துவதால் காற்று மண்டலத்தில் இருக்கும் கரியமிலவாயு கடலில் கரைகின்றது. இதனால், காற்று மண்டலத்தில் இருக்கும் சுமார் 7 சதவிகிதக் கரியமிலவாயு குறைகின்றது.

மேலும், கால்நடைகள் அதாவது ஆடு, மாடு, எருமை வகை சேர்ந்த விலங்குகள்  உணவு செரிமானத்தின் பொழுது மிதேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன.  மேக்ரொ அல்காவை விலங்குகளின் உணவு தீனியில் கலந்து கொடுப்பதால் இப்படி உருவாகும் மிதேன் வாயு உற்பத்தியின் அளவை 82% குறைக்க இயலுகின்றது.

தற்போது பூமியின் மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு அதிகமடைவதால் பூமியின் வெப்பச் சக்தி பூமியை விட்டு விண்வெளிக்குத் தப்பிக்க முடிவதில்லை. இதனால், பூமியின் வெப்பம் அதிகரித்துப் பல விளைவுகள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு, பருவநிலை மாற்றம், வறட்சி, சுவாசக் கோளாறு, காற்று தூய்மை கேடு போன்றவையாகும்.

அல்கா, காற்று மண்டலத்தில் இருக்கும் கரியமிலவாயு மற்றும் மிதேன் வாயுவின் அளவைக் குறைப்பதன் வழி, பூமியின் வெப்பத்தைக்  குறைத்துப் பருவ மாற்ற  விளைவுகளிலிருந்து நம்மைத் தற்காக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மற்றொரு வகையான அல்கா பி.எச்.பி என்றழைக்கப்படும்  உயிர்ம நெகிழி (Bioplastic) தன்மையைக் கொண்டிருக்கின்றது. இயற்கையாக 10% உயிர்ம நெகிழி மட்டுமே கொண்டுள்ளதை விஞ்ஞானிகள் அறிவியல் தொழில்நுட்பத்தின் வழி 80% மாற்றியமைத்தார்கள்.

மக்கிப் போகும் தன்மையுடைய உயிர்ம நெகிழி ,  சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பொலி இதிலேன்(Polyethylene) போன்ற நெகிழிக்கு மாற்றாக உபயோகத்தில் உள்ளது.

அல்கா என்ற இந்த நீர்வாழ் தாவரம், மனிதனும் இயற்கையும் சுமூகமாக  இருக்க உறுதுணையாக அமைகின்றது என்பதை இதன்வழி நாம் காண முடிகின்றது.

அல்கா என்ற பாசியின் மீது நாம் கொண்டுள்ள அனுமானம், அதன் முக்கியத்துவத்திற்குச் சற்று முரண்பாடாக இருப்பதை உணரலாம்.