சின்ன அரசியல் கட்சிகளின் சின்ன சின்ன ஆசை

இராகவன் கருப்பையா – நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் சார்பில் போட்டியிட்ட 3 ‘கொசு’க் கட்சிகள் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டுள்ளது சற்று வேதனையாக உள்ளது.

ஐ.பி.எஃப்., மக்கள் சக்தி மற்றும் கிம்மா, ஆகிய அம்மூன்றுக் கட்சிகளும் முறையே ஜெலுத்தோங், நிபோங் தெபால், பூச்சோங் ஆகியத் தொகுதிகளில் போட்டியிட்டன.

அந்த 3 தொகுதிகளிலுமே பக்காத்தான் கூட்டணியின் வேட்பாளர்கள் பதிவு செய்த மகத்தான வெற்றிகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

ம.இ.கா.வின் முன்னாள் உதவித் தலைவர் பண்டிதன் தோற்றுவித்த ஐ.பி.எஃப்., 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணி விதைத்த ‘மக்கள் சக்தி’ மற்றும் மலேசிய இந்திய முஸ்லிம்களின் இயக்கமான ‘கிம்மா’, ஆகிய  3  கட்சிகளும் பல்லாண்டு காலமாக பாரிசானுக்கு ஆதரவளித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்மூன்றுக் கட்சிகளோடு, ம.இ.கா.வின் முன்னாள் இளைஞர் தலைவர்களில் ஒருவரான நல்லக்கருப்பனின் எம்.யு.ஐ.பி. மற்றும் 1986ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ‘மலேசிய பஞ்சாபியர்கள் கட்சி’, ஆகியவை தங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பாரிசானிடம் கோரிக்கை விடுத்து காலங்காலமாகக் காத்துக் கிடந்தன.

தேர்தல் நடைபெற இன்னும் சுமார் ஒரு மாத காலமே இருந்த போது, முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தியின் ‘மக்கள் முன்னேற்றக் கட்சி’யும் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டது எல்லாருக்கும் தெரியும்.

பாரிசானின் தோழமைக் கட்சிகளாகக் கருதப்பட்ட இவற்றின் நச்சரிப்புத் தாங்காமல் பாரிசான் தலைவர் அஹ்மட் ஸாஹிட்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க ஒப்புக் கொண்டார்.

எனினும் 3 கட்சிகளுக்கு மட்டுமே வாப்புக் கிடைத்தது. எம்.யு.ஐ.பி., ‘பஞ்சாபியர் கட்சி’ மற்றும் ‘மக்கள் முன்னேற்றக் கட்சி’ ஆடியவை விடுபட்டன.

‘மக்கள் சக்தி’ தலைவர் தனந்திரன், ஐ.பி.எஃப். கட்சித் தலைவர் லோகநாதன் மற்றம் ‘கிம்மா’ தலைவர் சைட் இப்ராஹிம் ஆகிய மூவருக்கும் தொகுதிகள் வழங்கப்படுவதாக அஹ்மட் ஸாஹிப் அறிவித்தார்.

வேதமூர்த்திக்கு ஒரு தொகுதி வழங்கப்படும் என பரவலாகக் கணிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

பாரிசான் வழங்கிய 3 தொகுதிகளுமே அதன் முன்னாள் பங்காளிக் கட்சியான ‘கெராக்கான்’ கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அவற்றை புதிய வேட்பாளர்களைக் கொண்டு மீட்டெடுப்பது வெறும் ‘பகல் கனவு’தான் என்பது பாரிசானுக்கும் தெரியாத ஒன்றல்ல.

பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி காலங்காலமாக ஜ.செ.க.வின் இரும்புக் கோட்டை என்பது யாவரும் அறிந்த ஒன்று.

அக்கட்சியின் பிரபலத் தலைவர்களில் ஒருவரான நேதாஜி ராயர் மொத்தம் 50,369 வாக்குகள் பெற்ற வேளையில் ஐ.பி.எஃப். கட்சியின் லோகநாதனுக்கு 7387 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதே போல சிலாங்கூரின் பூச்சோங் தொகுதியும் காலங்காலமாக ஜ.செ.க வின் அசைக்க முடியாதக் கோட்டையாக உள்ளது.

நாட்டின் பிரபலத் தொழில் நிறுவனமான ஐ.ஒ.ஐ.(IOI) குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரியின் மனைவியான யோ பி யின் அதிகப் பெரும்பான்மையில் இங்கு வெற்றி பெற்றார்.

முன்னாள் அமைச்சருமான அவருக்கு 79,425 வாக்குகள் கிடைத்த வேளையில் சைட் இப்ராஹிமிற்கு 21,468 வாக்குகளேக் கிடைத்தன.

தனேந்திரன் போட்டியிட்ட நிபோங் தெபால் தொகுதியில் பி.கே.ஆர். கட்சியின் ஃபட்லினா சிடேக் 42,188 வாக்குகளில் வெற்றி பெற்றார். தனேந்திரனுக்கு 10,660 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இவ்வளவு நாள்களாக பாரிசானின் தயவில், குறிப்பாக முன்னாள் பிரதமர் நஜிபின் ஆதரவில் இயங்கி வந்த இந்த ‘கொசு’க் கட்சிகளின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகிவிட்டது.

தேர்தலில் படுதோல்வியைத் தழுவி தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணியே இப்போது பக்காத்தானின் தயவில்தான் அரசாங்கத்தில் உள்ளது. இந்நிலையில், சிறு சிறு இந்தியக் கட்சிகளை இனிமேலும் அவர்கள் அனுசரிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

எனவே மிக வேகமாக மாறிவரும் நாட்டின் அரசியல் சூழலில் மாட்டித் தவிப்பதைவிட பெரியக் கட்சிகளுடன் இணைவதா அல்லது கட்சியைக் கலைப்பதா என்பது குறித்து அக்கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.