பள்ளிகளில் இனத்துவேசத்திற்கு இன்னமும் உரமிடப்படுகிறதா? ~இராகவன் கருப்பையா

தீவிரவாதம், பகடி வதை, குண்டர் கும்பல் மற்றும் பாலியல் தொல்லை, பொன்ற எதிர்மறையான நடவடிக்கைகளிலிருந்து  பள்ளிகள் விடுபடுவதை தனது அமைச்சு உறுதி செய்யும் எனக் கல்வி அமைச்சர் ஃபட்லினா அண்மையில் அறிவித்திருந்தார்.

நல்லிணக்கம், இனங்களுக்கிடையே ஒற்றுமை போன்ற விவரங்கள்குறித்து பிரதமர் அன்வாரும் கூட அடிக்கடி மக்களுக்கு ஞாபகப்படுத்தி வருகிறார்.

எனினும் ஆங்காங்கே  ஒரு சில பள்ளிகளில் இனத்துவேச வாடையுடன் கூடிய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகவே உள்ளது.

அரசியல்வாதிகளின் அறிவிப்புகள், ஆலோசனைகள் எல்லாம் வெறும் அரசியல் கண் துடைப்புதானா என்று எண்ணும் அளவுக்கு வேதனைக்குரிய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் ஜொகூரில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றைச் சேர்ந்த மலாய் மாணவர்களுக்குப் பிரத்தியேகமாக ஒரு கல்வி முகாம் நடத்தப்பட்டது.

இந்த ஓரவஞ்சனை தொடர்பாகப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க புலனக் குழுவில் கேள்வி எழுப்பப்பட்டபோது, குறுஞ்செய்தி அனுப்பும் செயல்முறையைத் தலைமையாசிரியர் உடனே முடக்கியதாகக் கூறப்படுகிறது. அக்குழுவின் நிர்வாகிகள் மட்டுமே குறுஞ்செய்தி அனுப்பும் செயல்முறைக்கு அது மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

வேறு வழியின்றி சில பெற்றோர்கள் இவ்விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தபோது ஃபட்லினாவின் கவனத்தையும் அது ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் மாநில கல்வி இலாகாவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என அவர் கை விரித்தபோதிலும் சினமடைந்த பெற்றோர்கள் சரமாரியாகக் கேள்விக் கனைகளைத் தொடுத்ததைத் தொடர்ந்து தலைமையாசியர் திடீரெனப் பல்டியடித்தார்.

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை எஸ்.பி.எம். தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் வகையில் இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக மலாய் மாணவர்களுக்குத் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கம் கூற முனைந்தார்.

அப்படியென்றால் இந்திய மாணவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. அவர்கள் சீனப் புத்தாண்டைக் கொண்டாடவில்லையே! அல்லது அப்பள்ளியில் பின்தங்கிய இந்திய மாணவர்களே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

மற்ற மாணவர்களுக்கு, அதாவது சீனப் புத்தாண்டில் சம்பந்தப்படாதவர்களுக்கு பிரிதொரு தேதியில் மற்றொரு கல்வி முகாம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்கூட்டியே தெளிவாக விளக்கமளித்தால் இதுபோன்றக் குழப்பங்களைத் தவிர்க்கலாமென ஜொகூர் சுல்தான் கருத்துரைக்கும் அளவுக்கு நிலைமை சற்று பெரிதாகிவிட்டப் பிறகு ஃபட்லினா மீண்டும் இவ்விவகாரம் தொட்டு விளக்கமளித்தார்.

இந்தப் பயிலரங்கில் பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லையென விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, நிலைமையைச் சாந்தப்படுத்தும் வகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் கல்வியில் இன, மத, பேதங்கள் இருக்காது என்றும் அவர்களுடைய நலனைப் பாதுகாப்பது அமைச்சின் தலையாயக் கடமை எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் என்ற வகையில் ஃபட்லினா தனது கடமையைச் செய்துவிட்ட போதிலும் தலைமையாசிரியர் நடந்து கொண்ட விதமும் அவருடைய விளக்கங்களும் பெறோரின் கேள்விகளை மேலும் அதிகரித்துள்ளது என்பதை அவர் அறிந்துள்ளாரா என்று தெரியவில்லை.