தமிழ்ப்பள்ளியில் இந்தியர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமா?

குமரன் வேலு | 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம், மனித உரிமை, சுதந்திரம், கல்வி உரிமை, தாய்மொழி உரிமை பற்றிய சிந்தனைகள் கல்விகற்ற ஆங்கிலேயர்களிடம் மேலோங்கிய தருணம். தொழிலாளர் உரிமைகள் பேசும் கம்யூனிச சிந்தனைகளும் கிளர்ந்த நேரம்.

1750-களில் அடிமைகள்போல் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின ‘குந்தா கிந்தே’ கூட்டம் போல்லல்லாது, 1800-களில் இந்தியா உட்பட மற்ற நாடுகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகள் எனும் கணக்கில் கொண்டுவரப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்க வேண்டியக் கடப்பாடு, மதத்தோடு சேர்த்து அதிகாரத்தையும் திணித்த ஆங்கிலேய அதிகார மையத்திடம் இருந்தது.

மலேசியாவில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்ட நோக்கம் தமிழ்மொழியைத் தமிழர்க்கு அல்லது இந்தியர்க்குக் கற்பிக்கத்தான். அதுபோலத்தான், மற்ற மொழிப்பள்ளிகளும். தெலுங்கு மொழிப்பள்ளிகள், தெலுங்கு மொழி பேசும் இனத்தார்க்கு என்று ஏற்படுத்தப்பட்டவை. இது வரலாறு.

தாய்மொழியை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? வெறும் தொடர்புக் கொள்வதற்கு மட்டும் என்றால், தொடர்பு கொள்வது மட்டுமே நோக்கம் என்றால், தாய்மொழி வேண்டாமே. எந்த மொழியும் கற்றுக்கொண்டு தொடர்பு கொண்டு பேசலாமே!

நமது தாய்மொழியைக் கற்காமலே கூட பேசலாமே! ஓர் இனத்தின் அனைத்து பரிமாணத்தையும் கடத்தி, அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் கடப்பாடு தாய்மொழியுடையது.

இலக்கியம், இசை, கலை, பண்பாடு, விழுமியம், மரபு, நம்பிக்கை, சிந்தனை, மெய்யியல் என்று பல பரிமாணங்களைக் கொண்டது ஓர் இனம். எனவே, இனப்பற்றின் தோற்றுவாய் மொழி. அந்தந்த இனமும் தன் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளும் உரிமையை அன்றைய ஆங்கிலேயர் ஆட்சி மதித்தது.

ஓர் இடத்தில் பத்து மாணவர்கள் இருந்தால் பள்ளிக்கூடம் அமைக்கவேண்டும் என்றது அப்போதையச் சட்டம். 1950-களில் நாடு தழுவிய நிலையில் 880-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் உருவாயின. நம்மவர்கள் குறைவாக இருந்தும், கிளந்தானில் கூட தமிழ்ப்பள்ளிகள் உருவாயிற்று.

ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை அடைந்து விட்டது. ஆனால், தாய்மொழிப்பள்ளிகள் தொடர்கின்றன. இது விடுதலை நிமித்தம் ஏற்படுத்தப்பட்ட சமூக ஒப்பந்தம் (social contract). எனவே, தாய்மொழிப்பள்ளிகள் தொடரவேண்டும்.

அரசாங்க ஆதரவில் இயங்கும் அல்லது நிதிஉதவி பெற்று, கல்வித் திட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் இருவகைப் பள்ளிகள், தேசியப்பள்ளிகளும் தேசிய வகைப்பள்ளிகளும்.

தேசியப் பள்ளிகள் (மலாய்மொழிப் பள்ளிகள்) மலேசிய இனத்தின் தேர்வாக இருக்க வேண்டும் என்று இன்றைய அரசாங்கம் வலியுறுத்துகிறது. அது மலாய்க்காரர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா இனங்களுக்குமானது என்கிறது.

தேசிய வகைப் பள்ளியென்று, தாய்மொழிப்பள்ளிகள் அழைக்கப்படுகின்றன. இங்கேயும் அதே கல்வித்திட்டம்தான். மலாய்மொழி, ஆங்கில மொழியும் கட்டாயம். இங்கேயும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இது ஓர் இனத்தின் தாய்மொழிப் பள்ளி என்ற அடையாளம் இருந்தாலும் ‘தேசியம்’ எல்லா இனங்களும் படிக்கலாம் என்று கூறுகிறது.

கேமரன் மலை போ 2 தமிழ்ப்பள்ளியில் நிறைய பழங்குடி மக்களின் குழந்தைகள் தமிழில் படிக்கின்றார்கள். மலாய்க் குழந்தைகளும் சீனக் குழந்தைகளும் கூட சிறிய எண்ணிக்கையில் தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றார்கள்.

தரம், தரம் என்று தமிழ்ப்பள்ளிமீது நம்பிக்கை இல்லாது வேறு பள்ளிக்கு ஓடிய ‘தரமான’ தமிழர்கள் உட்பட, எல்லோரும் தமிழ்ப்பள்ளிப் பக்கம் வருவார்கள் என்று இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அது நிறைவேறுவது, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கையில்தான் பெரும்பங்கு இருக்கிறது.

தமிழ்ப்பள்ளியில் கல்வித்தரம் கிடுகிடுவென உயர்ந்து பன்னாட்டு பள்ளிகள்போல மாறினால், அச்செய்திகள் ஊடகங்களில் எதிரொலித்தால், தமிழ்ப்பள்ளி பக்கம் இந்தியர் அல்லாதவரும் ஓடிவரும் சாத்தியங்கள் நிரம்பவே இருக்கிறது.

இப்போதும், இனி எப்போதும் தமிழ்ப்பள்ளிகள் தமது தனித் தன்மையை இழந்துவிடாது நிலைக்க வேண்டும். தமிழைக் கற்றுக்கொள்ள விழைவோருக்கானப் பள்ளியாகவும் இருக்கலாம். ஆனால், இவை தமிழ்மொழிப் பேசுவோருக்கானப் பள்ளிகள் என்ற அடையாளம் நிலைப்பதென்பது தமிழர்கள் கையிலே இருக்கிறது. தம்மை தமிழர் என்று உணர்வார் முயற்சியிலே இருக்கிறது.

தமிழ்ப்பள்ளிக்கு என்று ஒரு வலிமை/ சிறப்பு இருக்கிறது. அதில் முதலீடு செய்தால் தமிழ்ப்பள்ளி ஈர்ப்பு மிகுந்ததாக மாறும்.