இந்திய மலேசியர் சமூகம் சிறுபான்மைச் சமூகமா?, ஜீவி காத்தையா

எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்கு ஓர் இறுதிக் கேள்வி: இந்நாட்டில் இந்தியர்கள் சிறுபான்மைச் சமூகத்தினர் என்று எந்தச் சட்டம் சொல்கிறது?

இந்தியர்கள் சிறுபான்மையினர். அவர்களின் உரிமைகளுக்காக பாரிசான் அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்கிறது  அம்னோ. 

சிறுபான்மை இனத்தினரான இந்தியர்களின் உரிமைக்காக  போராடுவோம் என்று மஇகா  கொக்கரிக்கிறது.

பிரிட்டீசாரால் தோற்றுவிக்கப்பட்ட மசீசகூட இப்போதெல்லாம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகள் பற்றி குய்யோமுய்யோ என்கிறது.

பணம் உங்களுக்கு, பதவி எங்களுக்கு என்று கூறிய அம்னோவை நம்பிய மசீச இறுதியில் பணத்தையும் பதவிகளையும் (எச்.எஸ்.லீ மற்றும் டான் சியு சின் போன்றவர்கள் வகித்த நிதி அமைச்சர் பதவிகள்) அம்னோவிடம் இழந்து விட்டு நிற்கும் மசீச இந்திய சிறுபான்மை இனத்தில் உரிமை பற்றி பேசுகிறது. இப்போது அதன் வேட்பாளர்களுக்கு சிறுபான்மை இன இந்தியர்களின் வாக்குகள் தங்கம் போன்றதாகி விட்டது.

இந்தியர்களை சிறுபான்மையினர் என்று கூறும் அம்னோவும்,  ஆமாம்   என்று கும்மி அடிக்கும் மஇகாவும் மசீசவும் எந்தச் சட்ட அடிப்படையில் இந்தியர்களை சிறுபான்மையினர் என்கின்றனர்?

இந்நாட்டின் முதன்மைச் சட்டம் பெடரல் அரசமைப்புச் சட்டம். அச்சட்டம்  இந்தியர்களை சிறுபான்மை இனத்தினர் என்று கூறவில்லை.

அச்சட்டப்படி குடிமக்கள் அனைவரின் பொது உரிமைகளும் பொது கடமைகளும் சமமானவையே. நலிந்து நிற்கும் குடிமகனுக்கு உதவ ஓரிரு விதிவிலக்குகள் உண்டு. அவை அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. அதற்கு முரண்பாடான விளக்கம் கொடுத்து நாட்டின் வளத்தைக் கொள்ளையடிக்கும் அம்னோவை தட்டிக் கேட்க பாரிசான் பங்காளிகள் முன்வருவதில்லை.

நெற்றியில் விபூதி பூசலாமா? தாவணி போடலாமா? சொங் சாம் உடுத்தலாமா? சம்பந்தன் வேட்டி கட்டலாமா? இவை பொது உரிமைக்கும் பொது கடமைக்கும் அப்பாற்பட்டவை.

உரிமைதான் கடமை உணர்வின் உயிர்நாடி. உரிமை இல்லையென்றால் கடமை ஏது?

இந்நாட்டு குடிமகன் இந்நாட்டின் இறையாண்மையைத் தற்காக்க தன்னுயிரை அர்ப்பணிக்கும் கடமை உடையவன். தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞனும் அக்கட்டமையை ஆற்றியே தீரவேண்டும்.

உரிமைகளுக்கு அவன் கொடுக்கும் விலை அவனது உயிர். எத்தனை இந்திய மலேசிய இளைஞர்கள் அந்த விலையைக் கொடுக்க வேண்டும்? ஏழு இளைஞர்கள் போதுமா? ஏழு விழுக்காடு இந்திய இளைஞர்கள் போதுமா?

நோ, நோ, நோ! நூறு விழுக்காடு இந்திய இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்! (இந்தியர்களுக்கு (சீனர்களுக்கும் கூட) நாட்டுப்பற்று இல்லை அதனால்தான் அவர்கள் இராணுவத்தில் சேர்வதில்லை என்று ஓர் அம்னோ அமைச்சர் கூறியதை மறக்கவே கூடாது. இவ்வாறு இந்தியர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குரியாக்கிய அந்த அமைச்சரை பாகன் டத்தோ தொகுதியில் என்ன செய்ய வேண்டும்? )

கடமைக்கு கோட்டா இல்லை; உரிமைக்கு கோட்டா! கடமை, நூறு விழுக்காடு. உரிமை, ஏழு விழுக்காடு!

ஏழு விழுக்காடு இந்தியர்கள் வரி கட்டினால் ஓகேவா? ஏழு விழுக்காடு இந்திய வாக்காளர்கள் பாரிசானுக்கு வாக்களித்தால் போதுமா? 7 விழுக்காடு இந்தியர்கள் அம்னோசாமியாகவும் எஞ்சிய 93 விழுக்காட்டினர் பெந்தோங் காளியாகவும் மாறினால் எப்படி?

ஓர் இந்தியர் சிறு தொழில் செய்வதற்கு எஸ்எம்இயில் கடன் கேட்டால், பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறாயா என்று கேட்கப்படுகிறது. சட்டத்தின் நாற்றமே தெரியாத மாஸ் தஜுடினின் மைத்துனி சட்டம் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைவர்!

இந்தோனேசியா (அதில் சுலுவாசி வந்தேறியான நஜிப்பு உட்பட), சீனா, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வந்தேறிகளின் சந்ததியினருக்கும், இந்தியாவிலிருந்து “சாமார்த்தியம்” பண்ண வந்த வந்தேறிகளின் சந்ததியினருக்கும் 100 விழுக்காடு உரிமை. ஆனால், இந்தியாவிலிருந்து “சம்பாதிக்க” வந்த வந்தேறிகளின் சந்ததியினருக்கு  7 விழுக்காடு. அதற்கும் கையேந்தி நிற்கின்றனர்.

கேட்டதோ பழையச் சோறு. கிடைத்ததோ ஈரப்பசைகூட இல்லாத எலும்புத் துண்டு! ஒரு பாரிசான் இந்திய அமைச்சர் 7 விழுக்காடு கேட்டாராம். கிடைத்ததோ 9.4 விழுக்காடு என்று அம்னோ ஆட்சியின் தாராளம் கண்டு பூரிப்படைந்தார்.

அடுத்த நாளே இன்னொரு இந்திய முன்னாள் துணை அமைச்சர் அந்த 7 விழுக்காடு கூட கிடைக்கவில்லை என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

இந்தியர்கள் அன்றும் இன்றும்: “1958 இல் பொருளாதாரத்தில் 28% இப்போது 1.1%, சொத்துடமையில் 24% இப்போது 7.9%, பட்டதாரிகள் 34% இப்போது 0.9%, வங்கிகள் 3, இப்போது 0, அரசாங்க ஊழியர்கள் 63% இப்போது 3.7%, நிலவுடமை 37% இப்போது 0.8%, தமிழ்ப்பள்ளிகள் 1028 இப்போது 523, அமைச்சர்கள் 16 பேரில் 2 இப்போது 33 இல் ஒன்று…” (தமிழ் நேசன் 30.7.11) தற்போது பின்வாசல் வழியாக நுழைக்கப்பட்ட ஒருவருக்கு இந்தியர்களின் வாக்குகளைத் தவறாமல் அம்னோவுக்கு கப்பமாக கட்டப்படுவதை உறுதி செய்வதற்கான ஊக்குவிப்பாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அம்னோ இந்தியர்களை சிறுபான்மை இனத்தவர் என்று பட்டம் கட்டி இப்படிச் சிதைத்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு செயல்படும் பாரிசான் பங்காளிகள் அனைவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

நாட்டின் குடிமக்கள் என்ற தகுதியுடைய இந்திய மலேசியர்கள் இதர இன மலேசியர்களுக்கு இருக்கின்ற அதே கடமைகளைக் கொண்டுள்ளனர். அதே அடிப்படையில் அவர்களின் உரிமைகளும் இருக்க வேண்டும்.   அவர்களுக்கு ஏழும் வேண்டாம், எலும்பும் வேண்டாம். 100 விழுக்காடு உரிமை வேண்டும். இது பொதுத்தேர்தலுக்கான பகிரங்க கோரிக்கையாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும், அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.

இக்கோரிக்கையை எழுப்ப அனைத்து இந்திய மலேசியர்களும் தயாரா?

கூலியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் இந்தியர்கள் உணர்வற்ற பிண்டங்கள் அல்ல. சரியாக நூறு ஆண்டுகளுக்கு (1912) முன்பு பத்தாங் பெர்ஜுந்தை, சுங்கை திங்கி தோட்டத் தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்து 400 பேர், தங்களுடைய உரிமையைக் கோரி அத்தோட்டத்திலிருந்து கிள்ளானுக்கு இரவு பகலாக நடந்தனர். பெடரல் சட்டமன்றத்தில் (Federal Legislative Council) தோட்டத் தொழில் பிரிட்டீஸ் பிரதிநிதிகள் துள்ளிக்குதித்தனர். “கூலிகளுக்கு இவ்வளவு ஆணவமா? இது அடக்கப்பட வேண்டும்”, என்று கர்ஜித்தனர்.

அன்று இந்தியர்கள் தங்களுடைய வெறும் கையைக் கொண்டு அழித்த காடுகளின் வழியாக இன்று சொகுசான சாலைகள் செல்கின்றன. காடுகளை அழித்து ஓடாகிப்போன இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்டு விட்டது என்று மஇகா தலைவர் ஓராண்டிற்கு முன்பு பகிரங்கமாக அறிவித்து விட்டார். ஓரங்கட்டப்பட்டவர்கள் போராட வேண்டும். இந்திய மலேசிய சமூகமே, போராட வா என்று அச்சாலைகள் அழைக்கின்றன. நஜிப் கர்ஜிப்பார்!

இந்திய தலைவர்கள் தயாரா?