மலேசிய குடும்பத்தை உருவாக்க மக்கள் தயார், பிரதமர் தயாரா? –  கி.சீலதாஸ்

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாம் பிரதமராகப் பதவியேற்றதும் மலேசியர்களை நோக்கி முதல் வேண்டுகோள் விடுத்தார். அது வேண்டுகோளா அல்லது அவரின் தனிப்பட்ட அபிப்பராயமா, இரண்டில் எது என்பதைக் கிரகிக்க முடியவில்லை.

ஏனெனில், அரசியல்வாதிகள் பொதுவாகவே ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் சிந்திப்பார்கள்.  சிந்தித்துப் பேசும் பழக்கம் அவர்களிடம் மிகவும் குறைவு என்பது பொது கருத்து. அவர், “நாம் ஒன்றுபட்டு மலேசிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

அது அவருடைய தனிப்பட்ட கருத்தா? அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கருத்தா? கட்சி எனும்போது அவர் எந்தக் கட்சியோடு இணைந்தவர் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர் உண்மையில் அம்னோ உறுப்பினர். அம்னோவின் உதவித் தலைவர் பதவி வகிக்கிறார். முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் அமைச்சரவையில் துணைப் பிரதமர் பதவி வகித்தார்.

 

முகைதீன் யாசினுக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக்கொண்டபோது பதவியில் இருக்கும் எல்லா அம்னோ உறுப்பினர்களும் அவற்றிலிருந்து விலக வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்தது. அந்தக் கட்டளைக்கு இணங்காதவர்களில் இஸ்மாயிலும் அடங்குவார். எனவே, அவரின் கட்சி எது என்பது சந்தேகமே.

அம்னோவின் கரங்கள்

எது எப்படி இருந்தாலும் இஸ்மாயில் அமைத்திருக்கும் அமைச்சரவையைக் கண்ணுறும்போது அதில் அம்னோவின் கரங்கள் ஓங்கியிருப்பதைக் கவனிக்கலாம். ஆகமொத்தத்தில், அவர் அம்னோவைச் சார்ந்தவர் என்பது உறுதியாகிறது. அப்படியானால் மலேசிய குடும்பத்தைக் காப்பாற்றுவோம் என்ற அவரின் அறைகூவல் அம்னோவின் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாமா?

அம்னோ ஆட்சியிலிருந்த காலத்தில் மலேசிய உணர்வை வளர்க்க என்ன செய்தது என்று கேட்கத் தோன்றும். நியாயமான கேள்விதான். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் அமர்ந்திருந்த பெருமை அம்னோவுக்கு உண்டு.

அது தலைமை வகித்த ஆட்சியின்போது மலேசிய உணர்வை வளர்ப்பதற்கும், அப்படிப்பட்ட உணர்வு வேரூன்ற அது எடுத்த முயற்சி மிகக் குறைவே. அப்படியே முயற்சியில் இறங்கியிருந்தாலும் அது பட்டும் படாததுமாகவே இருந்தது. அது கட்சியின் நன்மையைக் கருதி செயல்பட்டது;

கட்சியின் உயர் பதவிகளில் இருப்போரின் நன்மையைப் பாதுகாப்பதில்தான் கவனம் மிகுந்து இருந்ததாகவும்; இன, சமய ஒற்றுமையில் அதன் முயற்சி அவ்வளவாகக் காண முடியவில்லை என்ற கருத்து பரவலாகவே இருந்தது. அது மாறிவிட்டது என்பதற்கான சான்று கிடையாது.

பதினான்காம் பொதுத் தேர்தலில் அது தோல்வி கண்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

மலேசிய குடும்பம் என்றொன்று இருந்தால்தானே அதைக் காப்பாற்ற முடியும்?

மலேசியா அமைந்து ஐம்பத்தெட்டு ஆண்டுகளாகிவிட்டன. அன்றிருந்த இன, சமய இணக்கத்தை, எல்லா இனங்களிடமும் காணப்பெற்ற நட்புறவை இன்று காண முடிகிறதா? இதற்கான விடையை ஆட்சியில் இருந்தவர்கள்தான் பதில் தர வேண்டும். இன்று, இன, சமய நட்பு சரிவைக் கண்டு மக்கள் தத்தளிக்கிறார்கள் : மறுக்க முடியுமா?

இஸ்மாயில் சப்ரி மலேசிய குடும்பத்தைப் பாதுகாப்போம் என்கிறார். மலேசிய குடும்பம் என்றொன்று இருந்தால்தானே அதைக் காப்பாற்ற முடியும்?

உதாரணத்துக்கு, கணவன்-மனைவி ஒற்றுமையில்தான் குடும்பம் செழிப்படையும் என்பார்கள். கணவன்-மனைவி உறவு இருந்தால்தானே அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்! கணவனும் மனைவியும் தனித்தனியே போய்விட்டார்கள் அல்லது தனித்து வாழ்கிறார்கள் என்றால் அந்தத் திருமண வாழ்க்கையில் குடும்பத்திற்கான லட்சணங்கள் தென்படவில்லை அல்லது குடும்ப லட்சணம் ஒரு காலத்தில் இருந்தது; இப்பொழுது அது இல்லை என்று சொல்லலாம்.

கணவன் மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்களிடையே இணக்கம் இல்லை எனின், அதுவும் ஒரு குடும்பமாக ஏற்றுக்கொள்வது கடினம்தானே!

அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆட்சி தலைமைத்துவத்தைக் கொண்டிருந்த அம்னோவும், அதன் பங்காளிகளும் மலேசிய குடும்ப உணர்வை வளர்க்கவில்லை என்பதை மக்கள் உணருகிறார்கள், நல்ல கல்விமான்கள் உணருகிறார்கள். ஆனால், ஆட்சியில் இருந்தவர்கள் உணராதது இந்த நாட்டின் துரதிரிஷ்டம்.

மலேசியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்றால் அது பிசகு அல்ல. ஆட்சியில் இருந்தவர்கள் இன, சமய ஒற்றுமையை சொந்த இலாபத்தைத் தரும் அரசியல் கருவியாகப் பாவித்தார்களே தவிர மலேசியர்களிடையே நட்புறவு – மனப்பூர்வமான மலேசிய குடும்ப உணர்வை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முயற்சிக்கவில்லை என்பதே உண்மையான நிலவரம்.

என் இனமும், சமயமும்தான் உயர்ந்தது

மலேசிய உணர்வு, மலேசிய குடும்ப உணர்வு ஏற்பட வேண்டும் என்பதில் இஸ்மாயில் யாகோப் உண்மையில் கரிசனம் கொண்டிருக்கிறார் என்றால் மக்களவை உறுப்பினர்கள் மட்டும் ஒன்றுபட்டு செயல்பட்டால் போதாது என்பதை அவர் முதலில் உணர வேண்டும்.

பாலர் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை அரசின் எல்லா துறைகளிலும் இன, சமயப் பாகுபாடற்ற, பாகுபாட்டைப் பாராட்டாத உணர்வை உருவாக்க வழி காண வேண்டும். என் இனமும், சமயமும்தான் உயர்ந்தது என்ற எண்ணம் எங்கு வாழ்கிறதோ அங்கே நியாயமான, பரந்த மனப்பான்மை, மனிதத்துவம் மரித்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் மலிந்தே காணப்படும்.

இந்த நிலையை மலேசியர்கள் கண்டு புழுங்கி, துவண்டு கிடக்கிறார்கள் என்பதே உண்மை. இதற்குத் தீர்வு கண்டால்தான் மலேசிய குடும்பம் உருவாகும்.

அரசியல் தலைவர்கள் உணர வேண்டியது என்ன? நம் மூதாதையர்கள் சுதந்திரத்திற்காகப் பேசும்போது என்ன சொல்லப்பட்டது? எதை நம்பினார்கள்?

அந்த நம்பிக்கையின் வாரிசுகள் தானே நாம்! நம் நாடு காலனித்துவ சங்கிலிப் பிணைப்பிலிருந்து விடுப்பட்டபோது நம் மூதாதையர் எப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்?

ஏகாதிபத்திய ஆட்சி முடிந்தது. அது மீண்டும் தலை தூக்காது என்ற நம்பிக்கை இருந்தது.

31.08.1957ஆம் நாள் வரலாற்றில், மேலே குறிப்பிடப்பெற்ற புனித விடுதலை இலட்சியங்களைப் பொறித்து அவை இவ்வுலகம் உள்ளவரை நீடிக்கும் என்பதை உணர்த்தியது. 16.09.1963ஆம் நாள் மலேசியா அமைந்தபோது அதே உற்சாகத்துடன் வரவேற்றோம்; கொண்டாடினோம். 1965 ஆகஸ்ட் 9ஆம் நாள் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்ட போதிலும் நாம் நமது மலேசிய உணர்வை இழக்கவில்லை.

புது வகை காலனித்துவ ஆதிக்கத்திற்கு நம் உரிமைகளை இழக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

நாம் சுதந்திரத்தை அடைந்தபோதும், மலேசியர்களாக மாறியபோதும் நம் மனதை விஷம் நிறைந்த எண்ணங்கள் ஆக்கிரமிக்கும்; அரசியல், சமுதாய, பொருளாதார வேறுபாடுகள் மலேசிய வாழ்க்கையின் அங்கமென நம்பவில்லை.

நாம் விடுதலை எய்தியபோது மறுபடியும் சட்டத்தால் பல கட்டுப்பாட்டு சங்கிலியால் பிணைக்கப்படுவோம் என்று நினைக்கவில்லை. நாம் சுதந்திரத்தைத் தெரிவு செய்தபோது புது வகை காலனித்துவ ஆதிக்கத்திற்கு நம் உரிமைகளை இழக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

நாம் சுதந்திரத்தை விழைந்த காலை நமது உரிமைகள், கெளரவம், தன்மானம் ஆகியவற்றின் மதிப்பு குறைக்கப்படும், மறுக்கப்படும் என்று எண்ணவில்லை.

இனம், சமயம் போன்ற தீயச் சக்திகளை உருவாக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து விடுதலை நாடினோம். எனவே, நாம் ஒருபோதும் மலேசியாவை நேசிப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

அதே வேளையில், நாம் நம் சுதந்திரத்தையும், உரிமைகளையும் கைவிட மாட்டோம். இதுதான் நமது இலட்சியம். இதுவே நமது மெர்டேக்கா தின உறுதிமொழி. மலேசிய குடும்பம் உருவாக நாம் தயங்க மாட்டோம். ஆக்ககரமான, மனப்பூர்வமான நடவடிக்கை தேவையே அன்றி வெறும் வார்த்தைகள் அல்ல.